பக்கம்:தமிழ்மாலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

பொழிவிற்கு அவர் குறிப்பிட்ட கொள்கைகள் மூன்று. அவை இவை:

1. சொற்செல்வம் உடைமை; 2. கருத்துக்களைக் காரண காரிய முறையில் வரிசைப்படுத்திக்

கொள்ளல்; 3. அவையோர் உள்ளங்கொள்ளும் நெறியறிதல்." இம்மூன்றையும் இவர் செம்மையாகவே கடைப்பிடித்தார். இவை இவருக்கு மேடை ஆட்சியில் மணிமுடிசூட்டின.

எச்சொற்பொழிவாயினும் முன்னரே ஆழ நினைந்து நூல்களைப் புரட்டிக் கருத்துக்களைக் குறித்துக் கொள்ளுதல் இவர்தம் மரபுப் பழக்கம். அவற்றைப் பார்வையில் வைத்துக்கொண்டும் பேசுவார். மனத்தில் அடுக்கிப் பதிந்து கொண்டும் எடுத்தெடுத்து விளக்குவார். ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் இரண்டரை மணிவரை இவர் பேச்சு அமையும். அரை மணியானதும் ஒர் இடைவெளி தருவார். எழுந்து புறத்தே சென்றும் வருவார். வந்து தொடங்கும்போது முதல் தொடக்கம்போன்று குரல் தந்து முன் சொன்னவற்றின் குறிப்புகளை அவைக்குத் தந்து கருத்துத் தொடர்புக்கு அவையினரை கொண்டுசெல்வார். இவற்றிற்கும்இடையில் முன்ஏற்பாட்டின்படி பால் அருந்துவார். தொண்டையைக் கனைத்துக் கொள்ளமாட்டார். எதையோ விடுத்து நினைத்துப் பார்ப்பவர் போல் ஒரு நிலையை இவரிடம் காண முடிவதில்லை மறந்துவிட்டேன் என்று சொல்லும் மேடைச்சறுக்கலை இவரிடம் காணமுடியாது. மேடையில் ஏறும் இடையூறால் சலசலப்பு நேரினும் சமாளிக்க வேண்டிய ஊன்றுகோல் இல்லாமலே தொடர்ந்து பொழிவார்.

பொழிவு முத்திரை

அடிகளார் சொற்பொழிவின் தனிமுத்திரை இவர் பொழிவின்நிறைவில் குத்துவதாகும். பொழிவில் விரித்துப் பேசியவற்றைத் தொகுத்துச் சொல்லும் முறை இவரால் தவறாது கொள்ளப்பெற்றது. அதிலும் இன்றியமையாக் குறிப்புகளைச் சிக்கனச் சொல்லாட்சியில் தருவார். இதனால் பொழிவைக் கேட்போர் கருத்துக்களைச் சிறு விரலடக்கப் பேழையில் அடக்கிக் கொண்டு செல்லும் பொதிவை ஏற்படுத்தியவர் ஆவார்.

திருவள்ளுவப்பெருந்தகை பதித்துள்ள சொல்வன்மை இலக்கணங்கள் அனைத்திற்கும் மேடையில் இலக்கியம் படைத்தவர் அடிகளார்.

அடிகளார் யாநலத்தும் இல்லாத நாநலம் என்னும் நலன் உடையவர்; சொல்லின்கண் சோர்வு இல்லாதவர் கேட்டார்ப்பிணிக்கப்பேசிக் கேளாரும் வேட்ப மொழிந்தவர் திறனறிந்து சொன்னவர்; வெல்லும் சொல்லினர்; பிறர்சொற் பயன் கொண்டவர் சொலல் வல்லர் சோர்வில்லாதவர் அஞ்சாதவர் உண்மையாகவே எவரும் அவரை இகலில் வென்றதில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/55&oldid=687115" இலிருந்து மீள்விக்கப்பட்டது