பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பின்பு சிறுகாக்கை பாடினியார் வாழ்ந்தனர் என்பதும் இது காறும் கூறியவற்றால் நன்கறியலாம்.

(2) தொல்காப்பியத்தின் காலம் வடமொழியில் வல்ல வடநாட்டார் தமிழகத்தில் நுழைந்து, இங்கேயே தங்கி வாழலாயினர். அதனால் அவர் தம் சொற்கள் தமிழ் மொழியில் இடம்பெறலாயின. இக்காரணத்தால்தான்,

"வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

(சொல் : 401)

எனவும்,

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

(சொல் : 402)

எனவும் தொல்காப்பியர், வடசொற்கள் தமிழிற் கலத்தற்கு இலக்கணம் கூறினார்; மேலும் சூத்திரம், படலம், பிண்டம், அம்போதரங்கம், காண்டிகை முதலியவற்றுக்கு இலக்கணம் கூறியுள்ளார். அவருக்கு முற்பட்ட காலத்தில் பிறமொழிச் சொற்கள் தமிழில் எடுத்தாளப்படுவதற்கு இலக்கண ஆசிரியர் விதி கூறி இருப்பரேல் , தொல்காப்பியர் அவ்விதியைச் சுட்டிக்காட்டி, 'என்ப' என்றோ. ' என்மனார் புலவர்' என்றோ கூறியிருப்பர், அங்ஙனம் அவர் கூறாமையால், அவரே இப்புது விதிகளை வகுத்தவர் என்று சொல்லலாம் (இது முன்பே கூறப்பெற்றது). அவர் காலத்தில் தள்ள முடியாத அளவிற்கு வடசொற்கள் தமிழில் இடம் பெற்று விட்டமையால் அவர் அவற்றிற்கு விதிகூறும் நிலைமை ஏற்பட்டது என்று கூறலாம்.

ஆரியர் (வடமொழியாளர்) தமிழகத்திற்கு வந்த காலம் .கி. மு. 7ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனப் பேராசிரியர் வி. அரங்காச்சாரியார் குறித்துள்ளனர். தமிழகத்தில்

6. Educational Review, October, 1928.