பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


முற்பட்டவர் எனலாம்;அல்லது பாணினியம் வடநாட்டில் தோன்றிய பொழுது அதனை அறியாது அதே காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவராகலாம். எனவே, தொல்காப்பியர் பாணினிக்கு முன்பு அல்லது அவரது காலத்தில் (அவரது நூல் தமிழகத்தில் பரவாத காலத்தில்) வாழ்ந்தவர் என்று கூறலாம். பாணினியின் காலம் கி. மு. 4-ஆம் நூற்றாண்டு என்று மேனாட்டு அறிஞர் கூறியுள்ளனர்.1

தொல்காப்பியம் செய்யப்பட்ட பின்பே பாண்டியர் தலை நகரான கபாடபுரம் கடலாற் கொள்ளப்பட்டது என்று இறையனார் களவியலுரை கூறுகின்றது, பாண்டியரது கபாடபுரம் பற்றிய குறிப்பு வால்மீகி இராமாயணத்திலும், வியாச பாரதத்திலும் வருகின்றது. வியாச பாரதம் பல இடைச்செருகல் பெற்று இன்றுள்ள நிலையை அடைந்த காலம் கி. மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்படாது என்று வின்டர்நிட்ஸ் கூறியுள்ளார். எனவே, பாரதத்திற் குறிக்கப் பெற்ற கபாடபுரம் கி.மு. 3, 4-ஆம் நூற்றாண்டுகளில் நல்ல நிலையில் இருந்திருத்தல் கூடியதே எனக் கொள்ளலாம்.

இதற்கு அரண் செய்வது போலக் கி. மு. 4ஆம் நூற்றாண்டினனான சந்திரகுப்தன் (கி.மு 325-301) அமைச்சனான சாணக்கியன் தனது பொருள் நூலில் முத்துகளின் பெயர்களைக் கூறும் இடத்தில் 'பாண்டிய கவாடம்" என்றும்

10. தொல்காப்பிய சூத்திரங்கள் சில பாணினிய சூத்திரங்களை ஒத்துள்ளன என்றும், சில பரத முனிவருடைய நாட்டிய சாத்திரசூத்திரங்களை ஒத்துள்ளன என்றும் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது இலக்கிய வரலாற்றில் (பக். 68) கூறியுள்ளனர். வித்துவான் க. வெள்ளை வாரணனார் தாம் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் அரிய ஆராய்ச்சி நூலில் (பக். 106-127) பிள்ளையவர்கள் கூற்றுகளுக்கு மறுப்பு வழங்கியுள்ளார். இரண்டையும் படித்துணர்வது நல்லது. - . . .

11. History of Ceylon, Vol. I, Part I, p. 208.