பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


யுள்ளார். உவமைகளுள் உள்ளுறை உவமம் மிகச் சிறந்த, பொருள் நயம் உடையது. அது அகப்பொருள் பற்றிய. செய்யுட்களில் இடம் பெற்றுச் செய்யுளின் பொருளைச் சுவையுறச் செய்யும். உவமவியலில் இச்செய்திகள் இடம் பெற்றுள.

மக்களுக்கு வாழ்வும் வளமும் தாழ்வும் சாவும் உண்டு. இவ்வாறே சொற்களுக்கும் இந்நான்கும் உண்டு. சொற்கள் மக்களைச் சார்ந்தே இந்நான்கு நிலைகளையும் அடை கின்றன. மக்கள் பல நூற்றாண்டுகளாக ஒரு சொல்லை ஒரு முறை பற்றியே வழங்கி வருவாராயின், அவர்தம் பின்னோர் அம்முறையிலேயே அதனை வழங்குதல் மரபு எனப்படும். சோறு உண்டான், கறி தின்றான் என்று கூறுவதே வாழையடி வாழையாக இருந்துவரும் வழக்கம். இந்த வழக்கமே 'மரபு' என்பது. இதற்கு மாறாகக் கறி உண்டான், சோறு, தின்றான் என்று கூறுவது மரபு அன்று. இவ்வாறே நம் முன்னோர் ஒவ்வொன்றையும் எச்சொல்லால் சொல்லி வந்தனர் என்பதை உணர்த்துவதே 'மரபியல்’ என்பது. குட்டி என்பதும் கன்று என்பதும் விலங்குகளின் இளமைப் பெயர்கள். ஆயினும் பசுக்குட்டி என்றும் நாய்க்கன்று என்றும் சொல்லுதல் மரபு ஆகாது; பசுக்கன்று, நாய்க்குட்டி என்று கூறுவதே மரபு. இத்தகைய செய்திகளைக் கூறுவதே இவ்வியலின் நோக்கமாகும்.

அகத்திணையியல் முதல் மரபியல் ஈறாக உள்ள எட்டு இயல்களிலும் சொல்லப்பட்ட செய்திகளை அமைத்துக் கூறும் செய்யுட்களின் இலக்கணம் செய்யுளியலில் விரித்துக் கூறப்பட்டுள்ளது. அகம்-புறம் பற்றி இதுகாறும் கூறப்பெற்ற செய்திகள், சில ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்ட செய்யுள் அமைப்பில் இடம் பெற்றால்தான் அறிவுடையோர் அவற்றின் சுவையைப் படித்து உணர்வர். ஆதலால் செய்யுளுக்கு இலக்கணம் இன்றியமையாததாயிற்று. உலக மொழிகள் அனைத்திலும், பாக்களே முதலில் தோன்றின.