பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

என்று மொழிநூல் அறிஞர் கூறுவர். இலக்கண அறிவு மிக மிக, செய்யுட்கள் வடிவாலும் பொருளாலும் சிறப்புறலாயின. தொல்காப்பியருக்கு முற்பட்ட தமிழ்ச் செய்யுட்கள் இலக்கண அமைதியால் சீரும் சிறப்பும் பெற்றிருந்தன என்பது, "நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதின் கூறி வகுத்துரைத் தனரே",என்னும் அடிகளால் அறியலாம்.

தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளையும், பாக்களின் வகைகளையும் இவ்வியலில் விளக்கியுள்ளார்; இருபது வண்ணங்களையும் எட்டு வனப்புகளையும் குறித்துள்ளார். எட்டு வனப்புகளாலும் அமைந்த நூல்கள் பலவாகும். அவை தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரும் சமகாலத்திலும் செய்யப்பட்டனவாகும். செய்யுளியலை நுணுகி ஆராயும் பொழுது தொல்காப்பியர் காலத்தில் இருந்த நூல்களின் வகைகள் மிகப்பல என்பது நன்கு உணரலாம்.

தொல்காப்பியம் கருத்தூன்றிப் படிப்பவருக்கு மிகவும் எளியது. அதனில் கூறப்பெற்றுள்ள செய்திகள் இன்னவை என்பதைப் பொதுமக்கள் அறிய வேண்டும் என்னும் கருத்தால் அறிஞர் க. சுப்பிரமணிய பிள்ளை என்பவர் பல ஆண்டு கட்கு முன்பு ஓர் உரைநடை நூல் எழுதியுள்ளார்; வித்துவான் க: வெள்ளைவாரணனார் 'தொல்காப்பியம்’ என்னும் பெயரில் அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியுள்ளார்; பேராசிரியர் சி. இலக்குவனார் 'தொல்காப்பிய ஆராய்ச்சி’ என்னும் பெயரில் மிக எளிய நடையில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இப் பெருமக்களுக்குத் தமிழ் உலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

சுருங்கக் கூறின், பண்டைத் தமிழ் மக்களின் நாகரிகம். பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமூக அமைப்பு முறை, அரசியல் நிலை, கடவுட் கொள்கை, வாழ்க்கை முறை, அரிய கருத்துகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு