பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


ஆராய்ந்து சமூக மாறுதலுக்குரிய நிலைமைகளை விளக்கி, வரலாற்றுப் பின்னணியில் இலக்கிய வளர்ச்சியை விளக்குதல் வேண்டும்.

“மனிதனது வாழ்க்கையில் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. அவ்வாறே இலக்கிய உலகத்திலும் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. மாறுதல்கள் இருப்பினும் ஒருமைப்பாடும் காணப்படும். மணிகள் பல நிறத்தனவாயினும் அவை கோக்கப்பெறும் நூல் ஒன்றியிருப்பது போல-வேறுபாடுகளுக்கிடையே ஒருமைப்பாடு இருக்கும். இலக்கிய உலகிலும் அவ்வொருமைப்பாடு உண்டு. அதனைச் சுட்டிக் காட்டுவது இலக்கிய வரலாற்றாசிரியரது கடமையாகும்.”

திரு. வி. சுப்பராவ் என்ற தெலுங்குப் புலவர் 1920 இல் எழுதிய “ஆந்திர வான்மய சரித்திரம்” என்னும் தெலுங்கு இலக்கிய வரலாற்று நூலுக்குத் தாம் வரைந்த முன்னுரையில் காலஞ்சென்ற பேரறிஞர் டாக்டர் சி. ஆர். ரெட்டி அவர்கள் மேற்கண்ட கருத்தினைத் தெரிவித்துள்ளனர். தெலுங்கிலுள்ள இச்செய்தியைப் படித்து, யான் எழுதியுள்ள முறை தக்கதே என்பதை எனக்குத் தெரிவித்து ஊக்கியவர் என் கெழுதகை நண்பர் வேதம் வேங்கடராய சாஸ்திரியார், M. A. ஆவர். அவருக்கு எனது நன்றி உரியது.

கல்வித்துறை இயக்குநரவர்கள் மதுரையில் என்னைத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிப் பேசுவித்தமையே இந்நூல் வெளிவரச் சிறந்த அடிப்படையாகும். தமிழகத்துக் கல்வித் துறையில் ஓய்வின்றி உழைத்து வரும் அப்பெருமகனார்க்கு என் வணக்கமும் நன்றியும் உரியவாகும்.

இவ்வாராய்ச்சி நூலை வெளியிட இசைவு தந்த சென்னைப் பல்கலைக் கழக ஆட்சியாளர்க்கு (Syndicate) எனது நன்றியும் வணக்கமும் உரிய.

கல்விக்கும் மருத்துவத்திற்கும் அருந்தொண்டாற்றி வருபவரும், உலகப் பெரியாருள் ஒருவரும், சென்னைப்