பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


காதையின் முடிவில் ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு மெய்களுள் ஒன்று பெற்று முடியலாம். இவ்வெழுத்துகளை ஈற்றில் பெற்று முடியும் பகுதிகளைக் கொண்டவை இயைபு எனப் பெயர் பெறும் என்று தொல் காப்பியர் கூறியுள்ளார். இப்பதினொரு மெய்களுள் ஒவ்வொன்றையும் ஈற்றில் பெற்ற இலக்கிய நூல் தொல்காப்பியர் காலத்தில் இருந்திராவிடில், அவர் இவ்வெழுத்துகள் மட்டும் ஈற்றில் வரும் என்று கூறவேண்டிய தேவை ஏற்பட்டிராது. அவர் தேர்ந்தெடுத்து இவ்வெழுத்துகளைக் கூறியிருத்தலால், இவற்றுள் ஒவ்வொன்றையும் இறுதியிலே பெற்று முடியும் நூல்கள் அவர் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடைமலை.

7. உலக வழக்குச் சொல்லினாலே செவ்விதாகக் கூறப்பட்டு எளிதில் தானே விளங்கத் தோன்றுவது புலன் என்னும் வனப்புடைய செய்யுளாகும். விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என்று பேராசிரியர் கூறியுள்ளனர்.

இங்குப் புலன் என்பது நாடகத்தைக் குறிக்கும் சொல்லாகும். நாடகம் என்பது வடமொழிப் பெயர். அதற்குத் தமிழர் வழங்கிய பெயர் புலன்" என்பது.” பாணர், விறலியர், கூத்தர் என்பவர் தமிழகத்தில் மிக்கிருந்தனர். இவர்களை வள்ளல்கள்பால் ஆற்றுப் படுத்தும் நூல்கள் பல இருந்தன. வள்ளல்கள் இவர்களைப் பெரிதும் ஆதரித்தனர் என்னும் விவரங்களை இன்றுள்ள தொகை நூல்களால் அறிகிறோம். இவர்கட்கு இவர்தம் துறையிற் புலமை நல்கிய பெருநூல்கள் தொல்காப்பியர் காலத்தில் மிக்கிருந்தனவாதல் வேண்டும் என்பது இச் சூத்திரத்தால் உணரப்படும்.'

20. டிை,241உரை. 21. ரா.இராகவையங்கார் தமிழ் வரலாறு, பக். 811.