பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

8. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்துப் பயிலாமல் இரு சீரடி முதலாக எழுசீரடி அளவும் வந்த அடி ஐந்தனையும் ஒப்பிட்டு ஓங்கிய மொழியால் பொருள் புலப்படச் செய்வது இழைபு என்னும் வனப்பாகும்." அவையாவன கலியும் பரி பாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத் தன என்பது.'

1. பலவகைச் செய்யுள் நூல்களைக் குறிப்பிட்ட தொல்காப்பியர் தமது நூலில் கால்வகை உரைநடையைப் பற்றியும் கூறியுள்ளார். அவற்றுள் ஒன்று பாட்டினிடையே வைக்கப்பட்ட பொருட் குறிப்பினால் வருவது, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதிகாரத்தில் இடை யிடையே வரும் உரைநடை இவ்வகையைச் சார்ந்தது.

2. பாட்டில்லாமல் பேச்சு வழக்கில் உரையளவாய் வருவது. இது உலக வழக்கில் மக்கள் பேசும் உரைநடை.

3. உண்மை நிகழ்ச்சி இல்லாமல் பொய்யே புனைந்துரைக்கும் அளவில் வருவது ஒருவகை உரைநடை, ஓர் யானையும் குருவியும் தம்முள் நட்புக்கொண்டு இன்ன இடம் சென்று இன்னவாறு செய்தன என்று அவற்றுக்குப் பொருந்தாத பொருள்படும்படி தொடர்நிலையால் நீண்ட காலமாக வழங்கப்பட்டுவருவது என்று பேராசிரியர் கூறி யுள்ளனர்.

4. பொய்யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகைப் பொருள் அளவாய் வருவது நான்காம் வகை. முழுமையும் பொய்யென்று தள்ளப்படும் நிலையில் அமையாது, உலகிய லாகிய உண்மை நிலையை ஒரளவு அறிவுறுத்துவனவாய்க் கேட்போர்க்கு நகைச்சுவையை விளைக்கும் பஞ்சதந்திரக் கதைபோலும் உரைநடை இவ்வகையைச் சேர்ந்தது.

22. செய்யுளியல், 242.