பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

(5) தொல்காப்பிய உரையாசிரியர்கள்

இளம்பூரணர்

தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்ற புலவர் பெருமக்கள் உரை கண்டுள்ளனர். இவருள் காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணர்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி. பி. 1178-12.18) குவலாள புரத்தை (கோலாரை)ச் சீயகங்கன் என்பவன் ஆண்டுவந்தான். அவன் கி.பி.1214இல் காஞ்சி அருளாளப் பெருமாள் கோவிலில் ஒரு திருப்பணி செய்தான் என்று அக்கோவில் கல்வெட்டுக் கூறுகிறது. அச்சீயகங்கன் காலத்திற்றான் பவணந்தி முனிவர் நன்னூலைச் செய்தார் என்று நன்னூல் சிறப்புப்பாயிரம் செப்புகின்றது . எனவே, பவணந்தியார் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்னலாம். இவர், இளம்பூரணர் தொல்காப்பியத்திற்கு வரைந்த உரையைத் தழுவியே நன்னூல் செய்தார்.” எனவே, இளம்பூரணர் பவணந்திக்கு முற்பட்டவராவர். அவர் காலம் கி.பி.11 அல்லது 12ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். இளம்பூரணர் உரை தொல்காப்பியம் முழுமைக்கும் கிடைத்துள்ளது.

சேனாவரையர்

சேனாவரையர் என்னும் பெயர் சில கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. அவற்றுள் ஒன்று கொற்கைக்கு அண்மையில் உள்ள ஆற்றூர்ச் சேனாவரையன்' என்ற ஒருவரைக் குறிக்கின்றது. கொற்கையைச் சூழ்ந்த நாடு "மாறோக்கம்’ எனப் பண்டைநாளில் வழங்கப்பட்டது. ஆற்றூர் அந்நாட்டைச் சேர்ந்ததேயாகும். தொல்காப்பியத்

1. A. R. E. 589 of 1919.

2. கலைக்களஞ்சியம் 2, பக். 141.