பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளால், தொல்காப்பிய உரையாசிரியர் காலம், தொல்காப்பியர் காலத்திற்கு மிகப் பிற்பட்டது என்பது தெளிவாகும்; அஃதாவது, ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்குப் பின்பே இளம்பூரணர் தோன்றினார்.அவருக்குப் பின்பு பிற உரையாசிரியர் தோன்றினர் என்பது தெளிவு. தொல்காப்பியருக்குப் பின்பு தமிழகத்தில் வட மொழியின் செல்வாக்கு மிகுதிப்பட்டது: ஆட்சிமுறையில் மாறுதல்கள் ஏற்பட்டன: சாதி வேறுபாடுகள் வேரூன்றி விட்டன; ஒரு சாதிக்கு ஒரு நீதி கூறும் நூல்கள் பெருகி விட்டன; பக்திநெறி பரவி விரிவடைந்தது. இம்மாற்றங்கள் தோன்றிய பின்பு வந்த உரையாசிரியர்கள் தங்களுக்கு ஏறத் தாழ 1600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற தொல் காப்பியத்திற்கு உரை கூறுதல் முற்றும் இயலவில்லை;அதனால் பல இடங்களில் குழப்ப உரை கூறிச் சென்றனர்: சாதிகளை நுழைத்து உரை கூறினர்; இங்ஙனம் இவர்கள் தவறு செய்த இடங்களைப் பேராசிரியர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் தம் உரையில் சுட்டிக் காட்டி இருத்தல் காணத்தகும். நடுவுநிலை உள்ளம் படைத்த நன்மக்கள் இவ்வுரை களைப் படித்து உண்மை தெளிவாராக, --