பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

                   தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

மாகிய வேதாந்த சூத்திரத்திற்குப் போதாயனர் இயற்றிய உரை ஆகும் என்பது 'பிரபஞ்ச ஹிருதயம்' என்னும் வடமொழி நூலில் கூறப்பட்டுள்ளது. அந் நூலில், இவ்வுரை மிக விரிவாக இருந்தது பற்றி உபவர்ஷர் என்பவர் அதனைச் சுருக்கி அமைத்தனர் என்பதும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த உபவர்ஷர் கி.மு.3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. எனவே, அவருக்கு முற்பட்ட 'கிருத கோடி' உரை எழுதிய போதாயனர் அவருக்கும் முற்பட்டவர்; ஏறத்தாழக் கி.பி.முதல் நூற்றாண்டின் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் ஆவர் என்று அறிஞர் கருதுகின்றனர். இதனால், 'கிருத கோடி’ ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை, அவ்வுரை பெரிதும் வழக்கிலிருந்த கி.பி.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருத இடம் தருகிறது."

 3. மணிமேகலை 29ஆம் காதையிலும், பிற காதைகளிலும் குறிக்கப்பட்டுள்ள பெளத்த சமயக் கொள்கைகள், ஏறத்தாழக் கி.பி.200-250 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவராக ஆராய்ச்சியாளரால் துணியப்படும் காகார்ச்சுனர் என்பவரால் உண்டாக்கப்பட்ட மகாயான பெளத்த மதக் கொள்கைகள் அல்ல. அவை ஈனயான பெளத்தமதக் கொள்கைகள். எனவே, மணிமேகலை காலத்தில் இருந்த தமிழகத்துப் பெளத்தம், ஈனயானத்தைச் சேர்ந்த செளத்ராந்திகப் பிரிவினது என்பது தெளிவாகும்.*

2. Vedanta Commentators before Sankaracharya by P. V. Kane. Proceedings, Fifth Oriental Conference, Vol. 11.

3. Dr. S. K. Ayyangar, Manimekalai in its Historical Setting” pp 61–67.

4. "Buddhistic Studies' Compiled by B. C. Law pp. 13–17; K. A. N. Sastry, Cholas (2nd ed.). pp. 55–56.