பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார் 141


எனவே, நாகார்ச்சுனர் கொள்கைகள் தமிழகத்தில் பரவு வதற்கு முற்பட்ட காலத்தது மணிமேகலை என்று கருதுதல் பொருந்தும்.

4. பெளத்த சமயத்துச் சாத்திய சித்தி' பிரிவினரான அரிவர்மர் ஏறக்குறையக் கி. பி. 250 இல் வெளிப்படுத்திய அநாத்மவாதக் கொள்கை மணிமேகலையில் இல்லை." இதனாலும் மணிமேகலை கி.பி.260க்கு முற்பட்டது என்பது தெளிவாகும்.

5. மணிமேகலை ஆசிரியரான சாத்தனார்க்கு நண்ப னான செங்குட்டுவன், பத்தினிச் சிலைக்குக் கல் எடுக்க வடநாடு சென்றான் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. அவன் எவ்வித எதிர்ப்புமின்றிக் கங்கையைக் கடந்து உத்தர கோசலத்தில் மட்டும் ஆரிய அரசரை வென்றான் என்று அந் நூல் கூறுகிறது. இங்ங்னம் தமிழரசன் ஒருவன் வடக்கே படையெடுத்துச் செல்லத்தக்க வசதி கி.பி. முதலிரண்டு நூற் றாண்டுகளில் இருந்ததா எனின், ஆம். ஆந்திர அரசர் கங்கை வரையில் செல்வாக்குப் பெற்றிருந்தனர்; செங்குட்டு வன் கங்கையைக் கடக்க உதவி செய்தனர். கயவாகுவின் காலம் கி. பி. 114-186 ஆதலால், செங்குட்டுவன் படை யெடுப்பும் இக்காலத்திலேயே நிகழ்ந்ததாதல் வேண்டும். இப் படையெடுப்பில் செங்குட்டுவன் நண்பரான நூற்றுவர் கன்னர் அவன் கங்கையைக் கடக்க உதவி புரிந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 'நூற்றுவர் கன்னர்' என்பது சதகர்ணி என்னும் வடமொழித் தொடரின் மொழிபெயர்ப்பு என்பதை எளிதில் உணரலாம். உணரவே, அக்காலத்து ஆந்திரப் பெருநாட்டை ஆண்ட சதகர்ணி அரசன் செங்குட்டு வனுக்கு நண்பன் என்பது பெறப்படும். அக்கால ஆந்திர அரசன் கெளதமீ புத்திர சதகர்ணி என்பவன். இவன் காலம்

5. "Manimekalai in Its Historical Setting,”

         pp. 79–95.