பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159 டாக்டர் மா. இராசமாணிக்கனார்

மக்களுக்குச் சொல்ல வேண்டுவது கற்றவர் கடமையாகும். மனிதன் பிறந்து வளர்ந்து கல்வி கற்று நேர்மையாக வாழ்வை நடத்தச் சில பண்புகள் அவனுக்குத் தேவைப் படுகின்றன. அறத்துப்பால் இப் பண்புகளை எடுத்து இயம்புகின்றது. வளர்ச்சியுற்ற இளைஞன் பலதுறை அலுவல்களில் ஈடுபடுகிறான். சமுதாயம், நாடு, அரசியல் என்பன பற்றி அவன் பல செய்திகளை அறிவது இன்றியமையாதது. ஆதலின் அவைபற்றிய விளக்கம் பொருட்பாலில் பேசப்படுகின்றது.

    இளைஞன் காதல் வாழ்வை மேற்கொண்டு காதலியோடு மனைவாழ்வை மாண்புற நடத்தச் சில உண்மைகள் தேவைப்படுகின்றன. அவ்வுண்மைகளைத் திறம்பட விளக்குவதே காமத்துப் பால். வீடு என்பது பலவகைப் பற்றுகளையும் விடுதல் என்று பொருள்படும். இளமை முதல் நேர்மையாக வாழ்க்கை நடத்திவரும் ஒருவன் தன் முதுமைக் காலத்தில் தன் குடும்பப் பொறுப்பைத் தன் மக்களிடம் ஒப்படைத்துக் குடும்பப் பொறுப்பிலிருந்து விலகி நின்று தூய உள்ளத்தோடு தன் வாழ்நாட்களைக் கழிப்பதை 'வீடு' என்று சொல்லலாம். "இவ்வுண்மையை உணர்ந்தே, இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு",என்று ஒளவையாரும் உரைத்தருளினார்.
    உலகில் இல்லறத்தில் வாழ்பவர் பலர்; இளமை முதலே துறவற நெறியை மேற்கொண்டு வாழ்வோர் மிகச் சிலர். அச்சிலரும் சமுதாய உறுப்பினராதலின் அவர்தம் சிறப்பையும் வள்ளுவர் சில இடங்களில் குறித்துள்ளார். எனவே, திருக்குறள் இல்லறம்-துறவறம் என்னும் இரண்டு நெறிகளையும் பற்றிப் பேசுகின்றது என்று கூறுதல் பொருத்தமாகும்.
   திருக்குறளில் கூறப்பெறாத பொருளில்லை; செய்தியில்லை. திருக்குறளில் அனிச்சம், மூங்கில் மரம், முள்மரம், நச்சுமரம். வற்றல் மரம், மருந்துமரம், பழமரம் முதலிய மர