பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. எட்டுத் தொகை
(1) எட்டுத் தொகை

எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாம். இவை மேலே சொல்லப்பெற்ற பரந்துபட்ட காலத்தில் பல்வேறு புலவர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடப் பெற்றவை. இவை தொகுக்கப்பெற்ற காரணத்தால் 'தொகை நூல்கள்’ என்று பெயர் பெற்றன. இவற்றுள் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றிய செய்திகளை நன்கு புலப்படுத்துவன. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் ஐந்தும் அகப்பொருளாகிய இன்பத்துறை பற்றிய ஒழுக்க நிகழ்ச்சிகளை அழகுற எடுத்துக் கூறுவன. பரிபாடல் அகம், புறம் இரண்டையும் எடுத்துப் பேசுவது.

 வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் புபா நான்கு வகைப்படும். எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடல், கலித்தொகை ஒழிந்த ஆறின் பாடல்கள் ஆசிரியப் பாவால் இயன்றவை. ஆசிரியப்பா மூன்றடிச் சிறுமை உடையது; பலநூறு அடிகள் பெருமையுடையது. கலித்தொகை என்னும் நூற்பாடல்கள் கலிப்பாவினால் இயன்றவை. பரிபாடல் என்னும் நூற்பாக்கள் பரிபாடல் என்னும் பாவால் தொகுக்கப் பெற்றவை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி, பேரெல்லை நானுாறு அடி.
1. ஐங்குறுநூறு : இது மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய பாடல்களைக் கொண்டது. இது மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை ஆகிய ஐந்து