பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 165

இதனைத் தொகுத்தவன் உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திர சன்மன்; தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெரு வழுதி. இவன் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும் (26) நற்றிணையிலும் (98) இடம் பெற்றுள்ளமையால் இவன் காலமும் சங்ககாலமேயாகும்.

5. கலித்தொகை : கலித்தொகையிலுள்ள பாலையைப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சியைக் கபிலரும், மருதத்தை மருதன் இளநாகனும், முல்லையைச் சோழன் நல்லுருத் திரனும், நெய்தலை நல்லந்துவனும் பாடினர் என்று வெண்பா ஒன்று விளம்புகின்றது. இவ்வெண்பா மிகவும் பிற்பட்டதென்றும், கலித்தொகை ஏடுகளில் காணப்படவில்லை யென்றும், இந்நூலை இயற்றியவர் நல்லந்துவனார் என்ற புலவர் ஒருவரே என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.1
6. பரிபாடல் : பரிபாடல்களைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் இன்னவர் என்பது தெரியவில்லை. 
7. பதிற்றுப்பத்து : இது சேரவேந்தர் பதின்மரைப் பற்றியது. இதனைத் தொகுப்பித்தவர் இன்னவர் என்பது தெரியவில்லை; தொகுத்தவர் பெயரும் தெரியவில்லை. இதன் கண் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இல்லை. இறுதிப் பத்து யானை கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையைப் பற்றியதாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். இஃது உண்மையாயின், இவனது இறப்பைப் பற்றிய பாடலைக் கொண்ட புறநானூறு தொகுக்கப்படுவதற்கு முன்பே இந்நூல் தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
8. புறநானூறு : புறநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் இன்னவர் என்பது தெரிய வில்லை.

______________________________ 1. Prof. S. Vaiyapuri Pillai, History of Tamil language and literature, p. 27. -- -

2. Ibid. p. 26.