பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169


தமிழர்க்கே உரிய தனிப்பட்ட நாகரிகப் பண்புகளும் அவருடன் பிற்காலத்தே கலந்த வடமொழியாளர்க்கே உரிய பண்புகளும் இந்நூற்கண் இடம் பெற்றுள்ளன. வேள்வி, அந்தணர், முத்தி, இதிகாச கதைகள், இந்திரன் பிரமன் பலராமன் முதலியோர் வழிபாடுகள் முதலியன புதியன வாய்த்தமிழகத்தில் நுழைந்தனவாகும். இராயசூயம் (இராஜசூய யாகம்) வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி என்ற மன்னர்களைப் பற்றிய பாடல்கள் புறநானுற்றில் இடம் பெற்றுள்ளன. எனவே, தமிழ் மன்னர்கள் வேதவேள்விகளைச் செய்யத் தலைப்பட்டு விட்டனர் என்பது இத்தொடர்களினால் நன்கு புலனாகிறது. தமிழகத்தில் வேத ஒழுக்கமும் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கியது என்பது தெளிவாகிறது. ஆகவே, சமயத் தொடர்பான வடசொற்கள் தமிழில் நுழையலாயின என்பது வெளிப்படை.

புறநானூற்றின்

சங்க நூல்களின் இறுதிக் காலம் ஏறத்தாழக் கி.பி. 300 என்பது முன்பே பல இடங்களில் கூறப் பட்டுள்ளது. எனவே புறநானூற்றுப் பாடல்களின் இறுதிக்கால எல்லையும் அதுவேயாகும். ஆதலால் புறப்பாடல்களின் காலப் பேரெல்லையைக் காண முயல்வது நமது கடமையாகும்.

  இந்திய வரலாற்றோடு தொடர்பு கொண்ட சில நிகழ்ச்சிகளும் பெயர்களும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் உணவு கொடுத்தது, வால்மீகியார் என்பவரின் பாடல் புறநானூற்றில் காணப்படுவது மோரியர் படையெடுப்பு. கரிகாலன் இமயப்படையெடுப்பு என்பவை குறிக்கத் தக்கவை. இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி இங்கு ஆராய்வோம்.