பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

173


குட்டுவன் ஆகிய இருவருக்கும் தந்தையான உதியஞ்சேரல் என்பவன் வேறாவான்.[1]

2. தருமபுத்திரன் (கி. மு. 1000)

‘அறவோர் மகனே, மறவோர் செம்மால்’ என்று புறப்பாட்டில் (366) கோதமனார் என்பவரால் பாடப்பெற்ற தருமபுத்திரன் தமிழ் நாட்டு அரசனாகக் காண்கிலன். இவன், யமதருமன் மகன், பாண்டவருள் மூத்தவன் என்பதே பொருத்தமாகத் தெரிகிறது. பாரத வரலாறு ஏறத்தாழக் கி. மு. 1000த்தில் நடைபெற்றதாக முன்பு கொள்ளப் பெற்றது. இங்ஙனம் கொள்ளின், இப்புறப் பாட்டிற் கண்ட தருமபுத்திரன், அவனைப் பாடிய கோதமனார்[2] ஆகிய இவர்தம் காலம் ஏறத்தாழக் கி. மு. 1000 என்னல் தவறாகாது, ...... இவற்றால் வடநாட்டுப் பாண்டவர் ஐவர்க்கும் தமிழரசர்க்கும் பலவகையினும் தொடர்புண்மை நன்கு தெளியலாம். இத் தொடர்புண்மையால், கோதமனார் தருமபுத்திரர்க்கு அறிவுறுத்தியதென்று நந்தமிழ்ப் பெருமக்கள் துணிந்த இச் செய்யுளின் பழமை நன்கு துணியலாம்[3] என்று பெரும்புலவர் ரா. இராகவையங்கார் குறித்திருத்தல் காண்க.

பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் “அருச் சுனனும் பாண்டிய மரபும்” என்னும் ஆராய்ச்சி மிக்க கட்டுரையில், வியாச பாரதம். மெகஸ்தனீஸ் வரைந்த ‘இண்டிகா’ இவற்றைக் கொண்டு பாண்டவர்க்கும் பாண்டி


  1. மு. இராகவையங்கார், சேர வேந்தர் செய்யுட்கோவை 1. முன்னுரை, பக். 9.
  2. இக் கோதமனார் வேறு, பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கோதமனார் வேறு என்பது, முன்னவர்க்குப் 'பாலை' என்ற அடை இன்மையால் அறியப்படும்.
  3. தமிழ் வரலாறு