பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தமிழ் மொழி—இலக்கிய வரலாறு

முதலில் பொருளில்லா வெற்றுரைகளாக இருந்த ஒலிகள் காலப்போக்கில் கருத்தை உணர்த்தும் சொற்களாயின என்பது அறிஞர் கருத்து.

முதலில் மனிதன் பாடுதற்கு மட்டும் அறிந்திருந்தான்; பின்புதான் பேசத்தொடங்கினான். அதனால் தான் ஒவ்வொரு நாட்டு இலக்கியத்திலும் பாட்டு முற்பட்டதாகக் காணப்படுகிறது, உரைநடை பிற்பட்டதாக அமைந்துள்ளது. என்று அறிஞர் கூறுகின்றனர்.[1]

சொற்களின் தோற்றம்

முதல் மனிதனுக்கு இயல்பான மலைக்குகையே வீடாகப் பயன்பட்டது. அக்காலத்தில் அவன் இயற்கையாகப் பெற்றிருந்தவை. ஒலியும் அதைப் பயன்படுத்த வல்ல அறிவுமேயாகும். அவனது குகைவீட்டில் இயற்கையான அறை ஒன்றே இருந்தது. அக்குகை வீடு போலவே, அவன் முதலில் பேசிய மொழி இயற்கையாக—அவனது வாயிலிருந்து பிறந்த ஒலித்தொடராக இருந்தது; அந்த ஒலித் தொடரில் எழுத்து, சொல், சொற்றொடர், அடிச்சொல் முதலிய பாகுபாடுகள் அப்போது அமையவில்லை.

மனிதன் மலையைப் பெரிய கற்களாக உடைப்பது போலப் பழைய மனிதன் தான் பேசிவந்த நீண்ட ஒலித்தொடர்களைப் பிரித்துப் பிரித்துச் சில பொருள்களின் குறியீடுகளாகப் பயன்படுத்த அறிந்தான். இங்ஙனம் அமைந்தனவே சொற்கள் என்பவை. பெரிய கற்பாறைகளிலிருந்து சிறிய கற்களை வெட்டியெடுப்பது போல மனிதன் அச்சொற்களை நாளடைவில் குறுக்கி எளிய ஒலித்துணுக்குகளாக அமைத்துக்கொண்டான். அவையே இன்று அடிச்சொற்கள் அல்லது வேர்ச் சொற்கள் என்பவை.[2]


  1. Otto Jespersen, Language, etc., pp. 436-437.
  2. டாக்டர் மு. வரதராசனார், மொழி வரலாறு, பக், 223-224