பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


பலாப் பழங்களைக் குரங்குகள் குடைந்து தின்பது வழக்கம். குறவன் அவற்றைப் பிடிக்க மரத்தில் வலை கட்டுவது வழக்கம் (342).

கொல்லி மலையின் ஒரு பகுதியில் செதுக்கப்பட்ட ஒரு பாவை கொல்லிப்பாவை எனப்பட்டது (89, 100). பாறையில் உருவம் செதுக்கும் சிற்பக்கலை அறிவு அக்காலத்தில் இருந்தது என்பது இதனால் தெரிகிறது. மகளிரின் தோள்மீதும் மார்புமீதும் சந்தனக் குழம்பு கொண்டு வரிக்கோலம் எழுதப்பட்டது. இது ஓவியக்கலை அறிவை உணர்த்துகிறது. பறை, பணிலம் (15), பதலை (59), முழவு (71), தட்டைப்பறை (133), குளிர் (197, 291, 360), முரசு (365) முதலிய இசைக் கருவிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. தெய்வ வழிபாட்டில் பலவகை இசைக்கருவிகள் ஒலிக்கப்பட்டன (263), பாணர் பலவகை யாழ்களைக் கொண்டு இசைக்கலையை வளர்த்தனர் (323, 336). நடனம் ஆடுபவள் ஆடுகளமகள் எனப்பட்டாள். ஆண்மகன் ஆடுகளமகன் எனப்பட்டாள். கூத்தர் என்பவர் துணங்கை முதலிய கூத்து வகைகளையும் கதையைத் தழுவிவரும் கூத்துகளையும் ஆடினர். அவர் ‘கோடியர்’ என்றும் பெயர் பெற்றனர் (78).

பெரும் புண்ணியம் செய்தவருக்கே அமுதவுணவு பெறுதற்குரியது. சுவர்க்கம் ‘பெரும் பெயர் உலகம்’ எனப்பட்டது. இவ்விரண்டையும் பெறுக என்று வாழ்த்து வதும் அக்கால மரபு (83, 201), ‘கடவுள்’ என்னும் சொல் ‘முனிவர்’ என்னும் பொருளிலும் வந்துள்ளது (203). மலைப்பக்கத்தில் சூலத்தை ஏந்திய பெண்தெய்வம் ‘சூலி’ என்ற பெயருடன் வணங்கப்பட்டது. அக்கால மக்கள் நல்வினை தீவினைகளில் நம்பிக்கை பெற்றிருந்தனர் (246); நிரையம் (நரகம்) இருந்ததென்று நம்பிளர் (258). உயிர்களை உடலிலிருந்து பிரிப்பவன் கூற்றம் எனப்பட்டான் 267). நோன்பிருந்தவர் நோற்றோர் எனப்பட்டனர் (344)