பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

205


வட சொற்கள்

தொல்காப்பியர்க்கு முன்னரே தமிழகத்தில் வடமொழி யாளர் இடம் பெற்றுவிட்டனர் என்பதும், அவர்தம் சமயக் கருத்துகளும் சொற்களும் தமிழ் மொழியில் இடம் பெற்று விட்டன என்பதும் முன்பே பல முறை கூறப்பட்டன அல்லவா? எனவே, இந்நூற்பாக்களிலும் சில வட்சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் அவுணர் (1) , யாமம் (5), சகடம் (165), நேமி (189), ஆத்திரை (யாத்திரை-293), ஆதி (293). ஆரம் (மாலை-821) என்பன குறிக்கத் தக்கவை. முருகன் அவுணரைக் கொன்றமை (1) கூறப் பட்டுள்ளது. அமிழ்தம் கூறப்பட்டுள்ளது (83, 201). அந்தணர்க்கு நீரோடு சொரிதல் வழக்கிற்கு வந்துவிட்டது (288). பார்ப்பனப் பாங்கன் களவு மணத்தில் இடம் பெற்று விட்டான் (156).

இந்நூற்பாக்களைப் பாடிய புலவருள் ஏறத்தாழ முப் பதின்மர் பெயர்களில் வடசொற்கள் காணப்படுகின்றன. ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன், உருத்திரன், உருத்திரன் கண்ணன். உரோடகத்துக்காரன், உலோச்சன், ஓதஞானி, (கருவூர்) ஓதஞானி, சாண்டிலியன், கரவீரன், தத்தன், கபிலர், பவுத்திரன், ஆத்திரையன், கந்தரத்தன், குலபதி, சத்தி நாதன், தாமோதரன், வடமன் தாமோதரன், தேவ குலத்தார். தேரதரன், பதுமனார், பரணர், பாரகாபரன், பூதத் தேவன், பூதம் புல்லன். கண்டரத்தன், மாதிரத்தன், மோதாசன், பிரமந்தன் என்னும் பெயர்களைத் தமிழ்ப் புலவர்கள் பெற்றிருந்தனர் என்பது கவனித்தற்குரியது. இவற்றை நோக்க, வடமொழியாளர் செல்வாக்குத் தமிழகத் தில் படிப்படியாக உயர்ந்து வந்ததை அறியலாம்.