பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


வாணிகம் : பல நாடுகளிலிருந்தும் கப்பல்கள் வந்து துறைமுகத்தில் தங்குவது வழக்கம் (293) . கடைத்தெரு நியமம் எனப்பட்டது (45). தமிழ் வாணிகர் வாணிகத்தின் பொருட்டு வடநாட்டிற்குச் சென்றனர்; கங்கையாற்றில் கலத்தில் சென்றனர் (189). பரதவர் மீனை விற்றுக் கள்ளைப் பெற்றனர். உப்பு வாணிகர் உப்பை விற்று நெல்லைப் பெற்றனர் (183). இவற்றை நோக்க, அக்காலத்தில் பண்டமாற்று வழக்கில் இருந்தமை தெளிவாகும்.

கலைகள் : தமிழகத்தில் ஒவியர் இருந்தனர் (118, 146, 177, 182, 268). பாணர் சீறியாழ் (38), பேரியாழ் (40) வாசித்தனர். முழவு (67), மயிர்க்கண் முரசு (93), தண்ணுமை (130), கிணைப்பறை (108), தொண்டகச் சிறுபறை (104), குடமுழா[1] (220), குழல் (69) முதலிய இசைக் கருவிகள் வழக்கில் இருந்தன. குறிஞ்சிநில மகளிர் நெல் முதலியவற்றைக் குற்றும்போது பாடிக்கொண்டே குற்றினர் (379).

மருத்துவன் அறவோன் எனப்பட்டான் (136), நோயை ஆராய்ந்து அந்நோய்க்குத் தக்க மருந்தையே கொடுத்தான் (136). சோதிடம் பார்த்தவர் ‘கணியர்’ எனப்பட்டனர். எனவே, சோதிடக்கலையும் சங்ககாலத் தமிழகத்தில் இருந்தது என்பது தெளிவாகும் (373).

சமயம் : அக்கால் மக்கள் தைத்திங்கள் முதல் நாளில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்டனர் (22). தை மாதத்தில் குளிர்ந்த நீரில் நீராடிப் பெண்கள் நோன்பிருந்தனர் (80). நீண்ட சடையையும் அசையாத மெய்யையும் கொண்டு மலையில் தவம் செய்பவர்(தவசியர்) அக்காலத்தில் இருந்தனர் (141). கடற்கரையில் பலவகைக் கொடிகள் படர்ந்த இடங்களில் அக்கொடிகளை அறுத்து அவ்விடங்களில் நோன்பினைக் கொண்ட மாதர் உறைவது வழக்கம்.


  1. திருத்தருப்பூண்டி-சிவன் கோவிலில் இஃதுஇன்றும் உள்ளது.