பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

215


அவர்கள் ‘படிவ மகளிர்’ எனப்பட்டினர் (272). இவர்கள் கவுந்தியடிகள் போன்ற சமண சமயப் பெண் துறவிகளாகலாம்.

பண்பாடு

தேரின் உருளையில் நண்டுகள் அகப்பட்டு நசுங்காதபடி பாகன் தேரைச் செலுத்தினான் (11) என்பது, அவனுக் கிருந்த அருள் உணர்ச்சியை உணர்த்துகிறது. சங்ககால மக்கள் செல்வத்தை நில்லாப் பொருள்' என்றனர் (126, 241); மன்னாப் பொருள் (71) என்றனர்; இன்பமும் இளமையும் விரைவில் கழிவன (46) என்னும் உண்மையை அறிந்திருந்தனர். பெரியோர் கொடிய தீத்தொழிலைச் செய்தவரிடத்து அச்செயலை நேரிலே கண்டும் உள்ளத்தால் ஆராய்ந்து அத்தொழில் செய்தோர் இனி அதனைச் செய்யாது ஒழியும்படி பலவாறு அறிவுரை கூறினர் (116): ஒன்றன் காரணமாக உண்டானதை வேறொன்றன்மேல் இட்டுக் கூறுதல் பண்புடையதன்று (117), விருந்தினர்களுக்கு உணவுப் பொருள்களைப் பகிர்ந்து கொடுத்தல் சிறந்த பண்பாடு (185) என்பவற்றைத் தமிழ்மக்கள் அறிந்திருந்தனர்; இரவில் விருந்து வரினும் உவகையோடு உபசரித்தனர் (142).

தம் வாழ்நாளும் பொருளும் பிறர் பொருட்டே என்று எண்ணி அருள்மிக்க நெஞ்சுடனே தமிழர் பொருளிட்டச் சென்றனர் (186, 286). இல்லின்கண் செயலற்று இருப்பவர்க்கு இம்மைக்குரிய புகழும் இருமைக்கு முரிய இன்பமும், மறுமையிலும் இன்புறுவதற்கு ஏதுவாகிய இரந்தோர்க்கு ஈதல் முதலிய கொடைமையும் ஆகிய மூன்றும் கைகூடுவதில்லை (214). புகழ் மிகும்படி அருள் உணர்ச்சியோடு வாழ்கின்றவரது செல்வம் பொலிவடையும் (217). மக்கள் மரம் பட்டுப் போகும்படி அதனிடமுள்ள மருந்தை முற்றும் கொள்ளார் (226). விருந்தினரை உபசரித்தல் உயர்ந்த பண்பாடு (258, 280, 281). ஆயுள் முதிர்ந்து