பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழ் மொழி—இலக்கிய வரலாறு


கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பெயர் பெறும், வளமற்றுப் புதர்களும் பருக்கைக் கற்களும் நிறைந்துள்ள இடம் பாலை எனப்படும்.

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் தம் பிழைப்புக்காக விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடினர்; தேன்கூடுகளை அழித்துத் தேன் எடுத்தனர்; இயற்கையாகக் கிடைத்த காய் கனிகளையும் கிழங்குகளையும் உண்டனர். இம்மக்கள் தாம் வாழ்ந்த குறிஞ்சி நிலத்தில் இருந்த மரங்களுக்கும் செடிகளுக்கும் கொடிகளுக்கும் தம்மளவில் வேறுபாடு அறிவதற்காக ஒவ்வொரு பெயரிட்டு அழைத்தனர். சந்தனம், கருங்காலி, மிளகுக் கொடி முதலிய பெயர்கள் குறிஞ்சி நில மக்களால் தமிழிற் சேர்ந்தன. குறிஞ்சிநில மலர்களின் பட்டியலைக் குறிஞ்சிப் பாட்டிற் காணலாம்.[1] அம்மக்கள் இவ்வாறே மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த பலவகை விலங்குகளுக்கும் பெயர்களை இட்டு வழங்கினர்; நாளடைவில் அறிவு பெற்றுத் தினை, சாமை முதலிய கூலங்களையும், கிழங்கு வகைகளையும் பயிரிட அறிந்தனர். அப்பொழுது உண்டான சொற்கள் பல. சுனை நீராடல், தேன் அழித்து எடுத்தல் முதலிய பல தொழில்களால் அவர்களிடம் தோன்றிய சொற்கள் பல. அவர்தம் தொழில்களுக்கேற்ற கருவிகளைக் குறிக்கும் பெயர்ச் சொற்கள் பலவாயின. காலப்போக்கில் ஆடல் பாடல் கலைகளைக் குறிக்கும் சொற்களும் அவர்களிடம் தோன்றின. இவ்வாறு குறிஞ்சி நிலத்தில் மட்டும் தோன்றி வளர்ந்த சொற்கள் பலவாகும்.

முல்லை நிலத்தில் ஆடு, பசு ஆகிய பால் தரும் விலங்குகள் வாழ்ந்து வந்தன. அவற்றை மேய்த்து, அவற்றின் பாலைத் தயிராக்கிப் பின்னர் மோராக்கி, வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சி, அவற்றை விற்று வாழ்ந்த மக்களே முல்லை நில மக்களான ஆயர். அவர்கள் அமைதியான

  1. வரி. 61-95.