பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஐந்திணை பற்றிய இப்பாடல்களின் வைப்பு முறை கவனித்தற்குரியது. ஒற்றை எண்பட வருபவை பாலை பற்றிய பாக்கள்; 10, 20, 30 என்னும் எண்களைப் பெற்று வருபவை நெய்தல் பற்றியவை; 4, 14, 24 என இறுதியில் 4 என்னும் எண்ணைப்பெற்று வருபவை முல்லை பற்றியவை; 2, 8, 12, 18 என 2, 8 என்னும் எண்களை இறுதியில் பெற்று வருபவை குறிஞ்சித் திணையைப் பற்றியவை; 6 என்னும் எண்ணை இறுதியில் பெற்று வருபவை (6, 16, 26 36 முதலியவை) மருதம் பற்றிய பாக்கள். இத்தகைய தொகுப்பு முறை குறுந்தொகையில் இல்லை. நற்றிணையிலும் இல்லை. எனவே, அவை இரண்டிற்கும் பின்னரே இந்நூல் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று நினைத்தல் தகும். 'குறுந்தொகைக்கு மறுதலையான நெடுந்தொகை' என்னும் பெயரும், இப்பாடல்கள் பின்பு தொகுக்கப் பெற்றவை என்பதை வலியுறுத்துவதாகும்.

அகநானூற்றுப் பாடல்களுள் குறிஞ்சி பற்றியவை 80; பாலை பற்றியவை 200; முல்லை பற்றியவை 40; மருதம் பற்றியவை 40; நெய்தல் பற்றியவை 40.

இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது, முதல் தொண்ணூறு பாடல்களுக்கு மட்டுமே குறிப்புரையாக உள்ளது. அடுத்து 70 செய்யுட்களுக்கு இந்நூலின் (அகநானூற்றின்) முதல் பதிப்பாசிரியரான வே. இராசகோபால ஐயங்கார் என்ற அறிஞர் உரை எழுதியுள்ளார். பின்னர் நூல் முழுமைக்கும் நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து உரை யெழுதியுள்ளனர். இவ்வுரையினால் இந்நூலின் சிறப்பு நன்கு விளங்குகின்றது.

இப் பாடல்களில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து நிலங்களின் இயல்புகள் விளக்கப் பட்டுள்ளன; புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்