பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழ் மொழி—இலக்கிய வரலாறு


பெயர்களே இலக்கியத்திலும் பேச்சிலும் இன்றளவும் இருந்து வருகின்றன.

பாலை நிலத்தில் வேட்டுவர் வாழ்ந்தனர். வழிப்பறி செய்தல், பாலை நிலத் தெய்வமாகிய கொற்றவையை வழிபடுதல் முதலியன இவர்தம் தொழில்கள். இவர்களால் உண்டான சொற்கள் சிலவாகும்.

இந்த ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் நாளடைவில் வாணிகத்துறையில் கலக்கலாயினர். அப்பொழுது ஒரு நிலத்தாரே சிறப்பாக வழங்கிவந்த சொற்கள் பிற நிலங்களிலும் பரவத் தொடங்கின. உயர்ந்த பழக்க வழக்கங்களும் பிற நிலங்களில் பரவலாயின. மக்களுக்குப் பயன்படும் ஒரு நிலத்து விலங்குகள் பிற நிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இத்தகைய கலப்பு முறையால் நாளடைவில் பல சொற்கள் எல்லா நிலங்களிலும் பொது வழக்குப் பெறலாயின. இதுகாறும் கூறப்பெற்ற சொற்கள், பல்லாயிர ஆண்டுகள் கணக்கில்-மக்கள் நாகரிகம் தோன்றி வளர வளரத் தோன்றியவையாகும்.

மொழி வளர்ச்சி

குழந்தை தொடக்க நிலையில் நாவினை அசைத்துப் பேசத் தொடங்குகின்றது; அது முதலில் ஆ, ஊ, வா, போ போன்றவற்றை ஒலிக்கின்றது. இவ்வொலிகள் நாளடைவில் வளரத் தொடங்குகின்றன. பின்பு அக்குழந்தை, பெற்றோர் ஒலிப்பதைப் பார்த்துப் பார்த்து அவர் போலவே ஒலிக்கத் தொடங்குகிறது. இது ‘போலச் செய்தல்’ (Imitation) என்னும் சிறப்பியல்பாகும். இச்சிறப்பியல்பால் தான் ஒருவன் தன்னிடம் இல்லாத ஆற்றல்களைப் பிறரிடம் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கற்றுக்கொண்டு தன்னை உயர்த்திக்கொள்ளுகிறான். இந்தப் பண்பே மனிதனது தாகரிக வளர்ச்சிக்கு முதல் அடிப்படை என்னலாம், குழந்தையின் வளர்ச்சிக்கும் இந்த ஆற்றலே காரணமாய் அமைந்துள்ளது.