பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241


எவரோ கட்டிவிட்ட வெண்பா ஆகும் என்பதே பேராசிரியர் திரு எஸ். வையாபுரிப்பிள்ளை, திரு வித்துவான் வே. வேங்கடராஜூலு ரெட்டியார் முதலியோர் கருத்துமாகும்.

(5) திருநெல்வேலி - சுவர்ணம் பிள்ளை அவர்கள் தமக்குக் கிடைத்ததாகக் கூறிய "ஊசி முறி” என்னும் நூலைத் தமிழ்ப் பேராசிரியர் திரு கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் பொருள் கொடுத்து வாங்கி ஆராய்ந்தார்கள், அது போலி நூல் - பொருளுக்காக இக்காலப் புலவர் பாடிய பொய்ந்நூல் - என்பதை அறிந்து கிழித்தெறிந்தார்கள், இங்ங்னம் பொருளுக்காகவும் விளையாட்டாகவும் பலர் தாமே கட்டிய பாக்களைப் 'பழம்பாடல்கள்' எனக்கூறி ஏமாற்றல் உண்டு. இவ்வெண்பாவின் படைப்பு அத்தகையோருள் ஒருவர் செயலாக இருக்கலாம் எனக் கோடலே பொருந்தும்.

  கலித்தொகைப் பாக்களின் நடை, மொழி அமைப்பு, சொல் அமைப்பு, நூல் முழுமையும் புராண இதிகாசக் கதைகள் விரவிக் கிடத்தல், பிற அகப்பொருள் நூல்களில் குறிக்கப் பெற்ற சிற்றரசர் பேரரசர் பெயர்களுள் ஒன்றேனும் குறிக்கப்படாமை முதலியவை, இந்நூல் கபிலர் பரணர் முதலிய புலவர்களுக்குப் பிற்பட்ட ஒருவரால் பிற்காலத்தில் (பெரும்பாலும் சங்க இறுதிக் காலத்தில்) பாடப்பட்ட நூலாக இருத்தல் வேண்டும் என்று நினைக்க இடம் தருகின்றன. இப்பாடல்களை ஐவரோ, பலரோ பாடினர் என்பதை உணர்த்தும் சான்று இப்பாக்களின் நடையில் இல்லை.2

3.பேராசிரியர் S. வையாபுரிப் பிள்ளை, தமிழ் மொழி இலக்கிய வரலாறு பக். 17, 51, 57,

ஐவர் பாடியவராயின் அவர்தம் பெயர்கள் ஏடுகளில் இடம் பெற்றிருக்கும்; பாடியவர் பலராயினும் பிறநூற் பாடல்களில் உள்ளவாறு புலவர் பெயர்கள் குறிக்கப்பட்டிருக் கும்.

த-16