பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு
 முல்லைநில இளைஞர்கள் அத்தொழுவில் பாய்வதற்கு முன்பு நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும், உறையும் தெய்வங்களை வழிபடுவர் (102,103 ). கன்னிப்பெண்கள் பரண்மீது நின்று வேடிக்கை பார்ப்பர் [102, 103}.
 வீரர்கள் தொழுவத்துள் பாய்ந்தவுடன் ஏறுகளைத் தழுவி அடக்க முற்படுவர். அவை சில வீரர்களைக் குத்திச் சாய்க்கும்; சிலர் குடல்களை வெளியே தள்ளச் செய்யும். குடில்கள் சில எருதுகளின் கொம்புகளில் சுற்றிக்கொள்வதும் உண்டு. ஏறுகளை அடக்கும் வீரர்கள் ஆயராலும் ஆய்ச்சிய ராலும் பாராட்டப்படுவர், இறுதியில் வீரரும் மங்கையரும் ஊர் மன்றத்தில் கைகோத்துக் குரவைக்கூத்து ஆடுவர். அப்பொழுது ஆய்ச்சியர் சில பாடல்களைப் பாடி ஆடுவர் (101-1041; இறுதியில் அரசனை வாழ்விக்கும்படி திருமாலை வேண்டுவர் (108-106).
 ஏறு தழுவலில் ஈடுபடாத இளைஞனை ஆயர்மகள் கணவனாக ஏலாள் (103). ஆயருள் ஆடுமாடுகளை மேய்த்தவர் ஆட்டிடையர் எனப்பட்டனர்; 'புல்லினத்தார்’ அல்லது 'குறும்பர்’ எனவும் அழைக்கப்பட்டனர். பசு இடையர் 'கோ இனத்தார்’ என்றும் "நல்லினத்தார்’ என்றும் கூறப்பட்டனர் [107, 1131.
 தலைவியின் தந்தையோடு அவள் தமையன்மாரும் உடனிருந்து அவளது திருமணத்திற்கு இசைவு தருவர் (107). -
 வினைவல பாங்கனான தலைவன், தலைவியின் தமையலனுக்கு உணவு கொண்டு செல்வான்; பசுக் கூட்டத்திலிருக்கும் தலைவியின் தந்தைக்குக் கறவைக்கலம் (பால் கறக்கும் பாத்திரம் ) கொண்டு செல்வான்; கன்றுகளை மேய்ப்பான் (108); திருமாலை எண்ணித் தலையினாலே வணங்கி, கையால் தொட்டுச் சூள் உரைப்பான் (108).