பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


றுள்ளமை இந் நூலுக்கென்று அமைந்த சிறப்பியல்புகளுள் சிறந்தது என்னலாம், அவ்வுண்மைகள் தலைவன் கூறுவன போலவும், தோழி கூறுவன போலவும், முக்கோற் பகவர் போன்ற பெரியோர் கூறுவன போலவும், வினைவல பாங்கர் கூறுவன போலவும் இந்நூலில் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்:

1. செல்வம் நிலையில்லாப் பொருள் [8].

2. வறியவனது இளமை சிறப்பை அடையாது; கொடைக்குணம் இல்லாதவனுடைய செல்வம் அவனைச் சேர்ந்தவரைப் பாதுகாவாது [10].

3. யாவர்க்கும் தீங்கு செய்பவன் இறுதியில் உறவினர் இன்றி, நண்பர் இன்றிக் கெட்டு ஒழிவான் [10].

4. இளமையும் காமமும் நாள்தோறும் கழியும் இயல்பின [12].

5. அறிவில்லாதவர் தமக்கு இறுதி உண்டு என்பதையும் மூப்பு உண்டு என்பதையும் மறந்துவிடுவர் [12].

6. நேர்மையற்ற முறையில் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் இம்மையிலும் மறுமையிலும் பகையாகும் [14].

7. முழுமதி நாள்தோறும் தேய்வது போல இளமையும் அழகும் தேயும் [17].

8. நற்குணமுடையவர் சொல் தவறார் [22].

9. நிலையாமையை உணர்பவர் கொடை புரிவர் [32].

10. சோம்பலில்லாதவன் செல்வம் வளர்ச்சி அடையும் [35].

11. மனிதயாக்கை பெறுதற்கு அரியது [141].

12. பொருள் இல்லாதவர் நிகழ்த்தும் இல்லறம் இன்பத்தைத் தராது [148].