பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

255


பரிபாடல்

இன்றுள்ள பரிபாடல்களிற் பல திருமாலையும், முருகனையும் பற்றியவை; பக்திநெறி பற்றியவை; தொல்காப்பியர் விதிக்கு மாறுபட்டவை, வையை பற்றிய பாடல்களும் முருகன் பற்றிய பாடல்களுள் சிலவுமே அகப்பொருள் பற்றியவை. எனவே, "தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்தில் புறம்பற்றிய செய்திகளும் பரிபாடலில் பாடப்பெற்றன” என்பது இப்பாக்களால் தெரிகின்றது.

இன்றுள்ள பரிபாடல் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாக்கள் அகம், புறம் ஆகிய இரண்டையும் பற்றியவை. எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறும் பதிற்றுப் பத்தும் புறப்பொருள் பற்றிய நூல்கள் என்பதும், ஏனைய ஐந்தும் அகப்பொருள் பற்றிய நூல்கள் என்பதும் முன்பே கூறப்பட்டன. அகப்பொருள் நூல்கள் ஐந்து திணைகளைப் பற்றிப் பேசும்; ஆனால் பரிபாடல்கள் ஐந்து திணைகளையும் நிலைக்களனாகக் கொண்டு அகப்பொருள் செய்திகளைக் கூறவில்லை. பிற அகப்பொருள் நூல்களில் பேரரசர் சிற்றரசர் முதலியோர் பற்றிய குறிப்புகள் இருக்கும். ஆனால் பரிபாடலில் அவற்றைப் பற்றிய குறிப்புகளே இல்லை. பாண்டியர்களைப் பற்றியும் அவர்களது நாட்டைப் பற்றியுமே குறிப்புகள் உள்ளன. பரிபாடலிலுள்ள புறப்பொருட் பகுதியிலும் பிற அரசர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. திருமாலிருஞ் சோலையில் உள்ள திருமால், திருப்பரங்குன்றத்து முருகன் ஆகிய தெய்வங்கள் பற்றிய தோத்திரப் பாக்களாகவே பல அமைந்துள்ளன. வையை பற்றிய பாக்களும், அதற்குத் தெய்வத் தன்மை கூறி, அதனை வழிபடும் பாடல்களாகவே அமைந்துள்ளன.

பிற தொகை நூல்களில் ஐந்திணைக் கடவுளர் ஆங்காங்குக் குறிக்கப்பட்டுள்ளனர்; ஆயின், பரிபாடலில் குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனும் முல்லை நிலக்கடவுளான திருமாலுமே விரிவாகப் பாடப்பெற்றுள்ளனர்.