பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

261


றில்லை இசைப் புலவர்கள் இயற்றமிழ்ப் புலவராயும் இருத்தல் கேசவனாரைக் கொண்டு அறியலாம்.

இங்ங்ணமே இயற்றமிழ்ப் புலவர் இசைத்தமிழிலும் வல்லராதலைச் சிலப்பதிகாரம் கொண்டு அறியலாம். எனவே, மேலே காட்டப்பெற்ற இசைப்புலவர் இருவரும் சங்ககாலப் புலவர் அல்லர் என்று உறுதியாகக் கூற இயலாமை காண்க.

2. பிற தொகை நூல்களிலும் உருத்திரன், உலோச்சனார், பவுத்திரன், பிரமதத்தன், காசிபன் கீரனார், சத்தி நாதனார், பிரமசாரி, கெளசிகனார், தாமோதரனார். மார்க்கண்டேயனார், வான்மீகியார் போன்ற வடமொழிப் பெயர்கள் புலவர் பெயர்களாக வந்துள்ளன. பிற தொகை நூல்களில் முருகன் சூரபதுமனைக் கொன்றமை, சிவன் முப்புரம் எரித்தமை, திருமால் பிரமனைப் படைத்தமை போன்ற புராண இதிகாசக் கதைகள் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. கண்ணன் நப்பின்னையை மணந்தமை, கண்ணன் குருந்து ஒசித்தது போன்ற பாகவத நிகழ்ச்சிகள் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையுள் கூறப்பட்டுள. கண்ணனும் பல தேவனும் நப்பின்னையை நடுவிற்கொண்டு ஆடிய அற்புதக் குரவை, ஆயர்பாடியில் ஆடப்பட்டது என்றும் ஆய்ச்சியச் குரவை அறிவிக்கிறது. கண்ணன் நீராடிக்கொண்டிருந்த ஆயர்மகளிர் ஆடைகளைக் கவர்ந்தமையும் அப்பொழுது பலராமன் வருதலையறிந்து, ஆயர் மகளிரது மானங் காக்க வேண்டிக் கண்ணன் குருந்து ஒசித்துத் தன் செயலைத் தமையன் அறியாமற் செய்தமையும் அகநானூற்றில் (59) மருதன் இளநாகனார், .

..............................வாடாஅது
வண்புனல் தொழுகை வரர்மணல் அகன்றுறை
அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல்’’

என்று குறித்துள்ளார்.