பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

25


ஒவ்வொரு கூட்டத்தார் யாதாயினும் ஒரு காரணம் பற்றி ஒரு சொற்குறியை ஒழித்து, அதனை வேறொரு சொற்குறியால் சொல்லி வந்தமையாலும் சொல்வழக்குகள் பெருகலாயின. இவ்வழக்குக்குக் ‘குழுஉக்குறி’ என்பது பெயர். பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றும், யானைப்பாகர் ஆடையைக் ‘காரை’ என்றும், வேடர்கள்ளைச் ‘சொல் விளம்பி’ என்றும் வழங்கும் இவை முதலானவை குழுஉக்குறி என்பர் நன்னூலார். ஆடை விற்பவர் வாங்குவோர்க்கு விளங்காமல் தம்முள் பேசும் சொற்களும் பலவாகும். இவ்வாறே ஒவ்வொரு குழுவினரும் பிறர் உணராத வகையில் பேசும் சொற்கள் தேவை பற்றி உண்டானவையாகும்.

மொழி நிலைகள்

மொழி ஆராய்ச்சி அறிஞர் உலகமொழிகளை நன்கு ஆராய்ந்து, (1) தனிநிலை மொழிகள், (2) ஒட்டுநிலை மொழிகள், (3) உட்பிணைப்புநிலை மொழிகள் என மூன்று வகையாகப் பகுத்துள்ளனர்.


(1) ஒரு மொழியில் உள்ள பெரும்பாலான சொற்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் தனித்தனியே நின்று வாக்கியமாக அமைந்து பொருள் உணர்த்தும் நிலை தனிநிலை (Isolation) என்று பெயர் பெறும். இத்தகைய மொழியில் அடிச்சொற்களே சொற்களாகும்; விகுதி இடைநிலை முதலியன இல்லை, சீனமொழி, திபெத்து மொழி, பர்மியமொழி, சயாம் மொழி ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை.

(2) அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது அவற்றில் ஒன்று சிதையாமல் நிற்க, மற்றொன்று சிதைந்து நிற்கும். இவ்வாறு அடிச்சொற்கள் இரண்டும் பலவும் பொருந்தி நிற்றல் ஒட்டுநிலை (Agglutination) எனப்படும்.

அறிஞன்-அறி+ஞ்+அன்

உண்டான்-உண்+ட்+ஆள்