பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

269


தலைவனது பரத்தைமையையும், தலைவி அதனைக் கடிதலையும், தலைவன் பொய்ச்சூள் புரிதலையும், தோழி அதற்காக அவனைக் கடிதலையும், தலைவன் தலைவியோடு வையையின் புதுவெள்ளத்தில் நீராடியதையும், தலைவன் இற்பரத்தையுடன் நீராடியதையும், தலைவி-பரத்தை உரையாடலையும் பற்றிக் குறிப்பிடுகின்றன.

இருங்குன்றம் : இஃது இன்றைய அழகர்மலையாக இருத்தல் கூடும் என்று கூறப்படுகின்றது. இருங்குன்றத்தின் மீது திருமாலுக்கும் பலதேவனுக்கும் ஒரு கோவில் இருந்தது. அதனால் இக்குன்றம், 'மாலிருங்குன்றம்’ எனப்பட்டது; அக்குன்றத்தில் சோலைகள் மிக்கிருந்தமையால் திருமாலிருஞ்சோலைமலை எனப்பட்டது (பாடல் 15, வரி 13-23) . அம்மலையில் சிலம்பாறு என்ற பெயருடன் ஒரு பெரிய அருவி விளங்கியது. மலைமீதுள்ள கோவிலில் குழலோசையும், மிடற்றுப் பாடலும், தாள ஒலியும், முழவொலியும் நிலவியிருந்தன. மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று மலையேறித் திருமாலையும் பலதேவனையும் வணங்கினர் [15, வரி 30-45). கண்ணனும் பலதேவனும் பெரும் பெயர் இருவர்' எனப்பட்டர் (15, வரி 661,

இருந்தையூர் : இருந்தையூர் என்பது கூடலுக்கு அப்பால் வையைக் கரையில் இருந்த ஊராகும். மதுரையில் இன்று கூடலழகர் கோவில் உள்ள இடமே அக்கால இருந்தையூர் என்பது. இங்குத் திருமால் இருந்த கோலத்தில் காட்சிதருகிறார். அதனால் இத்தலம் இருந்த ஊர்' என்று பெயர் பெற்றது. அப்பெயர் காலப்போக்கில் இருந்தையூர்' என மாறி வழங்கலாயிற்று.

தண்பரங் குன்றம் : இது கூடல் நகரத்திற்கு மேற்கில் இருந்தது. மலைமீது சோலைகள் மிக்கிருந்தன. மலையிலிருந்து அருவிகள் கீழ்நோக்கிப் பாய்ந்தன. இவற்றால் அம்மலை தண்பரங் குன்றம் எனப்பட்டது. [14,13-17) . மலைமீது முருகன் திருக்கோவில் இருந்தது. பாணர் யாழ்.வாசித்தனர். பலவகை இசைக் கருவிகள் ஒலித்தன.