பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழ் மொழி—இலக்கிய வரலாறு


இங்கு அறி, உண் என்பவை அடிச்சொற்கள். ஏனையவை இடைச்சொற்கள் எனப்படும். இந்த இடைச்சொற்கள் மொழியின் தொடக்க நிலையில் உண்டாக்கப்பட்டவை அல்ல; பெயர்ச் சொற்களும் வினைச்சொற்களுமே நாளடைவில் சிதைந்து இவ்வாறு பயன்படுகின்றன என்பது மொழி நூலார் கருத்து. ஒரு காலத்தில் முழுச்சொற்களாக இருந்த இவை, காலப்போக்கில் உருச்சிதைந்து இடைச் சொற்களாய்ப் பெயர் வினைகளோடு ஒட்டி நிற்கலாயின, இந்நிலையே ஒட்டுநிலை என்பது. தமிழும் பிற திராவிட மொழிகளும் இவ்வொட்டு நிலையைச் சேர்ந்தவை.

(3) அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது, இரண்டும் - சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையே உட்பிணைப்புநிலை (Inflection) என்பது. இவ்வகை மொழியில் அடிச்சொல் தெளிவாய் நிற்பது இல்லை; பகுதி விகுதி முதலியவற்றை எளிதில் பிரித்தறிதலும் இயலாது. வடமொழியும் ஐரோப்பிய மொழிகள் பலவும் இவ்வகையைச் சேர்ந்தவை.[1]. இவை நிற்க.

விகுதி இடைநிலை முதலிய இடைச்சொற்களைப்பற்றி இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியமே பேசுகின்றதெனின்,[2] தொல்காப்பியத்திற்கு முன்னரே இவ்விடை நிலைகள் இருந்திருத்தல் வேண்டு மென்பது தெளிவு. இவை தனித்தனிச் சொற்களாகப் பன்னெடுங்காலம் வழக்கிலிருந்த பின்னரே, காலப் போக்கில் சிதைந்து பெயரோடும் வினையோடும் ஒட்டி வாழும் நிலை ஏற்பட்டிருத்தல் வேண்டும். இந்நிலையை ஆழ்ந்து எண்ணிப் பார்ப்பின், தமிழின் பழைமை காலங் கடந்த ஒன்றாகிறது அன்றோ?


  1. டாக்டர் மு. வரதராசனார், மொழி வரலாறு, பக், 244-249.
  2. “இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும்
    நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே.”