பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


பந்தும் கட்டித் தொங்கவிடுதல் அக்காலத்தார் மரபு. அக்கோட்டை வாயிலில் அம்புகளை எய்யும் எந்திரப் பொறிகள் அமைந்திருக்கும். கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழியில் கொடிய முதலைகள் விடப்பட்டிருக்கும் (58). கோட்டைக் கதவு மிக்க வலிமையுடையது; இருப்பாணிகளால் இறுகப் பிணிக்கப்பட்டது. அதனை உடைக்க யானைகள் ஏவப்படும். யானைகள் தம் தந்தங்களால் அக்கதவினைப் பிளக்க முயலும். அம்முயற்சியில் அவற்றின் கொம்புகள் முறிவதும் உண்டு. கதவுக்குப் பின்பு கணையமரம் கதவிற்கு வலிமையாக அமைந்திருக்கும் (53),

கோட்டையின் முற்றுகையில் நால்வகைப் படைகளும் கோட்டையைச் சூழ்ந்துகொள்ளும். கோட்டையுள் இருப்பவர் வெளியில் வர இயலாது. கிடுகு (கேடயம்) ஏந்திய படை வீரரும் வேற்படையினரும் வாட்படையினரும் குதிரைப் படையினரும் யானைப் படையினரும் மதிலின் பக்கத்தில் நெருங்கி வளைந்து தமது முற்றுகையைப் பயனுள்ளதாக்குவர் (52) .

கோட்டை மதில்களில் கண்டார் விரும்பத்தக்க ஒவியங்கள் வரையப்பட்டிருக்கும் (68). கோட்டைக்கு வெளியிலுள்ள பகைவர் ஊர்கள் தீப்பற்றி எரியும். கோட்டையுள் உணவுப் பொருள்கள் செல்லாமல் தடுக்கப்படும் (71), கோட்டையுள் அடைபட்ட அரசன் நெடுநாள் கோட்டையுள் இருக்க இயலாவிடின், படையெடுத்த அரசனுக்குத் திறை தந்து போரைத் தடுப்பான் (62); மானமுடைய மன்னன் போரிட்டு மடிவான்.

பாசறை : அரசனும் அவன் படைகளும் தங்கியிருக்கும் இடம் பாசறை எனப்படும். பாசறையின் நடுவில் அரசனது இருக்கை அமைந்திருக்கும். பாசறையில் வீரர்கள் காவல் புரிவர். ஒருபால் யானைப் படைகள் தங்கியிருக்கும்; மற்றொருபால் குதிரைப் படைகள் தங்கியிருக்கும்; வேறொரு பக்கம் தேர்ப்படைகள் தங்கியிருக்கும்; பிறிதொருபால்