பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு


செயல்கள், மறக்குடி மகளிர் செயல்கள், புலவர் அறிவுரைகள் எனப் பல திறப்பட்ட செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

அக்கால மக்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள்: பலவகை நகைகள், உடைகள், உலோகங்கள், உணவுகள், ஊர்திகள், கட்டில்கள், கொடிகள், பாத்திரங்கள், மாலைகள், வாத்தியங்கள் முதலியவற்றின் பெயர்களை இந்நூலிற் காணலாம். தெய்வங்களின் பெயர்கள், கோவில்களின் பெயர்கள், விலங்குகள்-பறவைகள்-மரங்கள் இவற்றின் பெயர்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சங்ககாலத். தமிழருடைய உழவு, கைத்தொழில், வாணிகம், பழக்கவழக்கங்கள் முதலியவற்றையும் இந்நூல் கூறுகின்றது.

புறநானூற்றுச் செய்யுட்கள் பேராசிரியர் பலருடைய உள்ளத்தையும் உரையாசிரியர் பலருடைய உள்ளத்தையும் தம் வயமாக்கி அவற்றைத் தமக்கு முழுமணிப் பீடிகையாக்கிக்கொண்டு வீற்றிருந்தன என்பதை, அவரவர் அருளிச்செய்த நூல்களும் உரைகளும் இவற்றின் சொல் நடை பொருள் நடைகளை இடையிடையே பெரும்பாலும் தழுவி யிருத்தலே தெளிவாகப் புலப்படுத்தும். ![1]

இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அவ்வுரை இருநூற்று அறுபத்தாறு பாடல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அவ்வுரை மிகச் சிறந்த புலவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பதை அதன்நடையும் பொருள் அமைதியும் பிறவும் உணர்த்துகின்றன. பேராசிரியர் ஒளவை. சு துரைசாமிப் பிள்ளையவர்கள் இந்நூற் பாடல் ஒவ்வொன்றுக்கும். தக்க முன்னுரையும் உரையும் விளக்கமும் எழுதியுள்ளார். இந்நூலைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்டுள்ளனர். இப்புதியவுரை பெரிதும் பாராட்டத்தக்கது. ...


  1. 1. புறநானூறு, மூன்றாம் பதிப்பின் முகவுரை,

பக்.11.