பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு


உபசரியாது பிறர் வாயிலாக உதவியை அனுப்பினும், வெகுளும் இயல்பினர் (206, 209); சிறிது பொருள் தரினும் அதனைப் பெறாது வெகுண்டு செல்வர் (162, 208) .

புலவர் தம்முள் ஒருவரை ஒருவர் மதித்துத் தம் பாக்களில் போற்றினர் (158, 174, 202, 212) ; ஒரு புலவரை மதியாது நடந்துகொண்ட மன்னனிடத்து வெறுப்புக் காட்டி அவனிடம் செல்வதைத் தவிர்ந்தவர் (151, 202) ; இத்தகைய உயர் பண்புகளால் தமிழ் வேந்தரது மதிப்பைப் பெற்றனர். -

புலவர் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர். பெருஞ்சித்திரனார் என்ற புலவர் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து தம் மனைவியைப் பார்த்து, இச்செல்வத்தை உனக்கு இதுவரையில் கடன் கொடுத்தவர்க்குக் கொடு; நம் உறவினர்க்கு வழங்கு; இல்லாதவர் எவர் வந்து கேட்பினும் என்னைக் கேளாது உதவுவாயாக, (163) என்று கூறினார் எனின், சங்ககாலப் புலவரது பண்பாட்டை என்னென்பது:

அக்காலப் புலவர்கள் உள்ளதை உள்ளவாறே எடுத்துக் கூறும் இயல்பினர்; தமது வறுமையைச் சிறிதும் வெட்க மின்றி-மகன் தந்தைக்கு உரைப்பது போலத் தம் வள்ளலிடம் எடுத்துக் கூறினர் (154).

தமிழரசரும் புலவரும்; தமிழ் வேந்தர் தம் காலப் புலவர் பெருமக்களைப் பெரிதும் மதித்தனர்; அவர்தம் அறிவுரைகளை அவ்வப்போது ஏற்று நடந்தனர். கோவூர் கிழார் சோழரிடை நடைபெற இருந்த பெரும் போரைத் தம் அறிவுரையால் நீக்கினார் (44); பகை வேந்தனுடைய குற்றமற்ற மக்களைக் கிள்ளிவளவன் கொல்ல முனைந்தபோது அறிவுரை கூறி அம்மக்களைக் காத்தார்; இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றன் என்று தவறாக எண்ணி அவரைக் கொல்ல முயன்ற நெடுங்கிள்ளிக்குப் புலவர்களின் வாழ்க்கையை எடுத்துக் கூறி, இளந்தத்தன் உயிரைக் காத்தார் (47) . .