பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


அல்லது ஒரு மெய்யெழுத்தை மட்டும் உணர்த்தும் நிலையை அடைந்துவிட்டது.[1]

தமிழ் எழுத்துகள்

தமிழகத்துக் கல்வெட்டுகள் பிராமி எழுத்திலும், வட்டெழுத்திலும், கிரந்த எழுத்திலும் அமைந்திருக்கின்றன. தொல்காப்பியத்தையும் சங்க நூல்களையும் துண்ணறிவோடு படியாத பலர் வட்டெழுத்துகள் பிராமியிலிருந்து வந்தவை என்று எழுதி விட்டனர். வட்டெழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து பிறந்தவை அல்ல, கிரந்த எழுத்துகளின் திரிபும் அல்ல. வட்டெழுத்துகள் தமிழரே தமது முயற்சியால் கண்டு வளர்த்தவையாகும்.

தமிழில் இன்றுள்ள மிகப்பழைய இலக்கணம் தொல்காப்பியம். அஃது இற்றைக்குச் சற்றேறக்குறைய 2,300 ஆண்டுகட்கு முற்பட்டது என்பது அறிஞர் கருத்து. அப்பழங்காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியரே, தம் காலத்திலும் தமக்கு முன்னரும் இலக்கண ஆசிரியர் பலர் இருந்தனர் என்பதையும், பலவகை நூல்கள் இருந்தன என்பதையும் தெளிவாகக் குறிக்கின்றார். எனவே, தொல்காப்பியர்க்கு முன்னரே இலக்கண இலக்கிய நூல்கள் பல இருந்தன என்பது தெளிவு. கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் அசோகனால் பொறிக்கப் பெற்ற பிராமி எழுத்துகளைக் கொண்டு வட்டெழுத்துகள் தோன்றின என்று கூறுவோர் இந்த உண்மையை உணர்தல் வேண்டும்; உணரின், தமிழ் எழுத்துகளாகிய வட்டெழுத்துகள் தமிழராலேயே பேணி வளர்க்கப்பட்டவை என்னும் உண்மையை எளிதில் உணர்வர். மேலும், இது பற்றிய உண்மைகளை அறிய விரும்புவோர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் எழுதியுள்ள மொழிவரலாற்றைப் படித்துத் தெளிவு பெறுவாராக.[2]


  1. டாக்டர் மு. வரதராசனார், மொழிவரலாறு, பக். 399-409.
  2. பக். 426-439.