பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு


இங்ங்னம், சங்ககாலத் தமிழகத்தில் முடியுடை மூவேந்தர், சிற்றரசர், வீரர், செல்வர் ஆகிய அனைவரும் பைந் தமிழைப் பாங்குற வளர்த்தனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

தமிழ் வீரர் , தமிழ் நாட்டு வீரர் போர் என்றவுடன் துள்ளிக் குதிப்பவர்; தாம் போரிடச் செல்லும் நாடு தொலைவில் இருப்பினும் மிக்க மகிழ்ச்சியோடு செல்பவர் (81) , அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் பாம்பு போன்றவர் (89) . இவ்வீரர் குடிப் பெண்களும் அஞ்சாமை மிக்கவர்; தம் மைந்தர் போரில் மார்பில் புண்பட்டு இறந்தலையே விரும்பினர் (278) , ஒரு வீரத் தாய் போருக்குச் செல்லத்தக்க ஆடவன் தன் வீட்டில் இல்லாமையால் விளையாடிக்கொண்டிருந்த தன் ஒரே மகனை வேலைக் கையில் கொடுத்துப் போருக்கு அனுப்பினாள் (279) . இம்மகளிர், இறந்த தம் கணவர் உடலைப் போர்க்களத்தில் தழுவினர்; சிலர் தழுவி இறந்தனர் (288).

வீரர் மன்னன் தகுதி ஒன்றிற்காகவே தம் மகளை மணம் செய்து கொடுப்பர்; அரசனுக்கு அஞ்சித் தம் மகளைத் தாரார்; அதனால் வரும் போரை மகிழ்ச்சியோடு ஏற்பர் (388-852). போரில் இறந்த வீரர்க்குக் கல் நடப்படும். அக்கல்லில் அவனுடைய உருவமும் பெயரும் பீடும் பொறிக்கப்படும். பின்பு அக்கல் அனைவராலும் வழிபடப்படும் (232, 260, 306, 329) .

சமயம் : தமிழகத்தில் சிவபெருமான், கண்ணன், பல தேவன், முருகன் ஆகிய நால்வரும் நாற்பெரும் தெய்வங்களாகக் கருதப்பட்டனர் (56) . மக்களுக்கு மறுமை உலகம் உண்டு என்ற நம்பிக்கை இருந்தது (18). தெய்வத் திருவுருவங்கள் வழிபடப்பட்டன (106). உலகத்தைப் படைத்தவன் இறைவன் என்ற நம்பிக்கை இருந்தது (194). உலகில் எப்பொருளும் நிலையாதது-புகழ் ஒன்றே நிலைபெறும் என்று சான்றோர் நம்பினர் (105) ,