பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

306 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

(வரி 71-72) புகழுதலை நோக்க, மதுரைக் காஞ்சியில் வரும்,

 "பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
  சேரி விழவின் ஆர்ப்பெழுங் தாங்கு " 

என்னும் அடிகள் (318-329) இந்நன்னனைப் பற்றியன என்று கருதுதல் பொருத்தமாகும்.2 இங்ஙனம் கொள்ளின், மாங்குடி மருதனார் காலத்திலோ சிறிது முற்பட்டோ மலை படுகடாம் பாடப்பட்டது என்று கருதலாம்.

 பதிற்றுப்பத்து என்னும் நூலில் உள்ள எட்டுப்பத்துகளும் காலமுறைப்படி அமைந்துள்ளன. அவற்றுள் ஐந்தாம் பத்தைப் பரணர் பாடியுள்ளார். ஏழாம் பத்தைக் கபிலர் பாடியுள்ளார். இவ்விருவரும் பேகனைப் பாடியுள்ளனர்.3 ஆதலின், கபிலர், பரணரது முதுமைக் காலத்தில் இளைஞராய் இருந்தவர் என்று கருதுதல் தகும். பரணர் கரிகாலன் தந்தையாகிய உருவப்பல்தேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார் (புறநானூறு, 4) . எனவே, கபிலர் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தில் குறிஞ்சிப் பாட்டைப் பாடினார் என்று சொல்லுதல் பொருத்தமாகும்.
 மேலும், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரவேந்தன் மதுரைக்காஞ்சிக்குரிய பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தோற்றவன். அவன், "கபிலன் இன்றுளனாயின் நன்றுமன்"என்று (புறம், 53) கூறி யுள்ளான். இதனால் அவன் காலத்தில்-மதுரைக் காஞ்சி

 2. கொண்கானம் கிழானாகிய நன்னன் பெண்கொலை புரிந்தவனாதலின், அவனையும் அவன் மரபினரையும் புலவர் பாடா தொழிந்தனர். ஆதலின் இந்த நன்னன் அந்த நன்னன் மரபினரினும் வேறானவன் எனக் கொள்வது பொருத்தமாகும். இவன் செங்கண்மர் (செங்கம்) நகரை ஆண்டவன் என்னலாம்.
 3. புறநானூறு 143, 144.