பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

29


“வட்டெழுத்து ஒரு காலத்தில் இத்தமிழ்நாடு முழுமை யிலும் வழக்கில் இருந்திருத்தல் வேண்டும். பல்லவர் காலத்தில் அவர்கள் ஆண்ட தொண்டை நாட்டிலும், சோழ நாட்டிலும் பிராமி எழுத்துகளின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் ஏற்பட்டன. பல்லவர்கள் வழங்கிய கிரந்த எழுத்துகளும் நாகரி எழுத்துகளும் மிகுந்த காலம் வழக்கில் இல்லை. பல்லவர்க்குப் பின்வந்த சோழர்கள் கிரந்தத்தமிழ் எழுத்து களை நாடு முழுமையும் பரப்பினார்கள். விசய நகரப்பேரரசு தமிழகத்தைக் கைக்கொண்ட காலத்தில் நாகரி எழுத்து களைத் தமிழகத்தில் வழக்கிற்குக் கொணர்ந்தனர். இப்பொழுது அவையே மிகுதியாகப் பயிலப்படுவனவாகும்.”[1]

பிற மொழிக் கலப்பு

தமிழ்மொழி மிகப்பழைய காலத்தில் தமிழகத்தில் தனிநிலை பெற்று வளர்ந்துவந்தது. தமிழர் இந்தியாவில் இருந்த பல மொழி மக்களோடு காலப்போக்கில் வாணிகம், சமயம், அரசியல் இவற்றில் கலந்து உறவாடத் தொடங்கியமையால், வடமொழி, பிராக்ருதம் முதலிய மொழிச் சொற்கள் தமிழிற் கலந்தன. தொல்காப்பியர் போன்ற இலக்கண ஆசிரியர்கள் தமிழின் பழைய நிலையையும் தொன்னூலுடைமையையும் ஆராய்ந்து இயற்சொல், திரிசொல் இவையென்று சிறப்பித்துக் காட்டிப் பிறசொற்கள் தமிழின்கட் புகுதலை உடன்பட்டு, வடசொல், திசைச்சொற்கள் புகுதற்கும் விதி வகுத்தனர். இதனால் தமிழ் மொழிக்குக் கலப்பற்றுத் தனிநின்ற இயற்சொல் நிலை முன்பே உண்டென்பதும், அது பல்வகையானுந் தன்னோடொத்த ஆரியமாகிய வடதிசைச் சொல்லையும், பிற திசைகளில் வழங்கிய பழஞ்சொற்களையும் தன்னிடங்கொண்ட தென்பதும்,

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

என்னும் தொல்காப்பியச் சூத்திரம் கொண்டு துணியலாம்.[2]


  1. தி. ந. சுப்பிரமணியன், பண்டைத் தமிழ் எழுத்துகள், பக். 105-106.
  2. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக். 14.