பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

'ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

அறுவர் பயந்த ஆறமர் செல்வ’

என்று திருமுருகாற்றுப்படை (வரி 254-255) கூறுகின்றது. ஐவருள் ஒருவன் என்பது நிலம், நீர், காற்று, தீ விசும்பு, ஆகிய ஐந்தினுக்கும் உரிய தேவர் ஐவருள் ஒருவனைக் குறிப்பதாகும். அவன் தன் உள்ளங் கையில் (சிவன் தந்ததைப்) பெற்றான் என்பது முதல் வரியின் பொருளாகும். ஆயின் பரிபாடலில் ஐவருள் ஒருவன் அங்கை ஏற்றதாகக் கூறப்பட வில்லை என்பது கவனித்தற்குரியது.

சிவபெருமான் ஆறு முகங்களோடு விளங்கி ஆறுநெற்றிக் கண்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தினார்: காற்றுத் தேவனையும் தீத்தேவனையும் அப்பொறிகளைக் கங்கையில் விடுமாறு பணித்தார். காற்றுத் தேவன் சிவனை வணங்கி அத் தீப்பொறிகளைப் பெற்றுச் சென்றான். வழியில் தீக்கடவுள் அப்பொறிகளைத் தாங்கிச்சென்று கங்கையில் விடுத்தான். கங்கை சரவணப் பொய்கையில் அவற்றை உய்த்தது. சரவணப் பொய்கையில் ஆறு முகங்களையும் பன்னிரண்டு கைகளையும் உடைய ஒரே குழந்தையாக அப்பொறிகள் மாறின. திருமால் முதலிய தேவர்கள் கட்டளைப்படி கார்த்திகை மாதர் அறுவர் குழந்தைக்குப் பாலூட்டச் சென்றனர். முருகன் அத்தாய்மார் பொருட்டு ஆறு குழந்தைகளாக மாறினான் என்பது கந்த புராணம் கூறும் செய்தியாகும்.

திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள "ஐவருள் ஒருவன்' காற்றுக் கடவுளே என்பது இக் கதையால் விளங்குகிறது. எனவே, சங்ககால நூலாகிய பரிபாடலில் சொல்லப்பட்டுள்ள முருகனது பிறப்பு வரலாறு வேறு திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள முருகனது பிறப்பு வரலாறு வேறு என்பது தெளிவாகும். சங்க காலத்தில் திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் இருந்திருப்பாராயின், அவர் பரிபாடல். கதையையே கூறியிருப்பர்.