பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மு. இராசமாணிக்கனார்

311


இவர் அங்ங்ணம் கூறாமையின், சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என்று கருதுவதே பொருத்தமாகும்.

(2) சங்க கால நக்கீரர் 56ஆம் புறப்பாட்டில்,

“ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா கல்லிசை நால்வர்”

என்று கூறினார். இதனால் சிவன், முருகன், கண்ணன், பலராமன் ஆகிய நால்வர்க்கும் ஞாலம் காத்தலும் கால முன்பும், தோலா நல்லிசையும் இயற்கையாகவே அமைந்துள்ளமை தெரிகிறது. ஆயின், திருமுருகாற்றுப் படையைப் பாடிய நக்கீரர், மும்மூர்த்திகளும் தத்தம் தொழில் புரியும் தலைவர் ஆகும்படி, முருகன் தோன்றியருளினான்’ (வரி 162-163) என்று பாடியுள்ளார். இதனால், முருகன் பிறப்பினால் மும்மூர்த்திகளின் தலைமை செயற்கையாய் அமைந்தது என்பதன்றோ பொருளாகிறது? இங்ஙனம் கடவுள் பற்றிய செய்தியில் மாறுபட்ட இரண்டு கருத்துக்களை ஒரே நக்கீரர் பாடியிருப்பாரா?

சங்ககாலப் புலவர் ஒரு தெய்வத்தை உயர்த்தப் பிற தெய்வங்களைத் தாழ்த்திக் கூறினமைக்குச் சான்றில்லை. அவர்கள் சமரச மனப்பான்மையுடனே தெய்வங்களைப் பாடியுள்ளனர். கடுவன் இளஎயினனார் என்ற ஒரே புலவர் பரிபாடலில் திருமாலுக்கு ஒரு பாடலும் முருகனுக்கு ஒரு பாடலும் பாடியுள்ளார். மதுரைக் கண்ணத்தனார் திருமாலையும் சிவனையும் இரு பெருந்தெய்வம்' என்று (அகம்360) பாடியுள்ளார்.

இளங்கோவடிகள் சிவனையும் முருகனையும் திருமாலையும் ஒருபடித்தாகவே பாடியுள்ளமையும் நோக்கத்தகும். இவை அனைத்தையும் நோக்க, முருகனை முழு முதற்கடவுளாகக் கருதும் நிலை சங்க காலத்துக்குப் பிற்பட்டதாகும் என்று கருதுதல் பொருத்தமாகும். ஆகவே, மும்மூர்த்திகட்கும் மேலாகப் பாடியுள்ள திருமுருகாற்றுப்