பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. தமிழின் தொன்மை

திராவிட மொழிகள்

இப்போது இந்தியாவில் உள்ள திராவிட மொழிகள் பன்னிரண்டு என்பது கால்டுவெல் கருத்து. அவற்றுள் ஆறு செப்பம் செய்யப் பெற்றவை; ஆறு செப்பம் செய்யப் பெறாதவை.[1] செப்பஞ் செய்யப்பட்டவை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு. செப்பஞ் செய்யப் படாதவை: துதவர் மொழி, கோத்தர் மொழி, கோந்த், கூ(கந்த்), ஒரொவன், ராஜ்மஹால் என்பன.

இம்மொழிகள் அனைத்தும் பழைய திராவிடமொழி ஒன்றிலிருந்து பிரிந்தன என்புது ஆராய்ச்சியாளர் துணிபு. இவை அனைத்திலும் சிறந்தது தமிழே என்றும், அதனிடந்தான் பழைய திராவிட மொழிக்குரிய அமைப்புகள் முற்றக் காணக்கிடக்கின்றன என்றும் கால்டுவெல் கூறியுள்ளார்.[2]

சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில் வெளிவந்துள்ள “திராவிட ஒப்பியல் அகராதி”யில் இரண்டாயிரம் சொற்கள் வெளிவந்துள்ளன. அவை தமிழ்-தெலுங்கு-கன்னடம்-மலையாளம்-துளு ஆகிய மொழிகளில் பொதுவாக வழங்கப்படுபவை,[3] அவை, இம்மொழிகள் ஒரே இனத்தவை என்னும் உண்மையை நன்கு உணர்த்துகின்றன.

ரிக்வேதத்தைச் சேர்ந்த ‘அயித்ரேய பிராம’ணத்தில் ஆந்திரர் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வேதகாலத்துக்கு முன்னரே பழைய திராவிட மொழியிலிருந்து தெலுங்கு


  1. *இப்பொழுது ஏறத்தாழ 20 என்று கணக்கிட்டுள்ளனர்.
  2. Comparative Grammar of the Dravidian Languages, Int. pp. 81-83 (ed. 3)
  3. Dravidian Comparative Vocabulary, vol. 1.