பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

319

திணை எனப்படும். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடு பேறு நிமித்தமாகப் பலவகை நிலையாமையைக் கூறுவது இந்நெடும் பாட்டின் குறிக்கோளாகும். இதனைப் பாடியவர் மாங்குடி மருதனார் என்பவர். அவர் நெடுஞ்செழியனால் மதிக்கப்பெற்ற புலவருள் முதல்வர். மதுரைக் காஞ்சி என்னும் பாடல் 782 அடிகளை உடையது.

இந்நீண்ட பாட்டில் நெடுஞ்செழியன் படையெடுப்பு, போர்ச் செயல்கள். பகைவர் நாடுகளை அழித்தல், இருபெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வெற்றி கொள்ளல், பரதவரை அடிப்படுத்தல், பகைவர் நாட்டுப் பொருள்களை நட்டோர்க்கும் புலவர் முதலியோர்க்கும் வழங்கும் பாண்டிய னுடைய சிறப்பியல்புகள், அவன் முன்னோர் அருஞ்செயல்கள், பாண்டிய நாட்டின் ஐந்திணை வளங்கள், ம துரையின் சிறப்பு, மதுரைக் கடைத்தெரு பற்றிய விவரங்கள், மக்கள் செயல்கள், மன்னன் நாட்காலையில் வீரர்க்கும் பரிசிலர்க்கும் களிறு முதலியவற்றை வழங்குதல் மன்னன் மேற்கொள்ள வேண்டும் கடமைகள் முதலியன அழகுறக் கூறப்பட்டுள்ளன.

7. நெடுநல்வாடை: 188 அடிகளைக் கொண்ட இப்பாடல், பகைமேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் கோப்பெருந்தேவிக்கு அவ்வருத்தம் நீங்கும் படி அவன் பகையை வென்று விரைவில் வருவானாக என்று கொற்றவையைப் பரவும் ஒருத்தி கூறும் முறையில் அமைந்துள்ளது. இதனைப் பாடிய புலவர் நக்கீரனார் என்பவர்.


  • இப்பாட்டில் நெடுஞ்செழியன் பெயரோ, தலையாலங்கானப் போரோ குறிக்கப்படவில்லை. ஆயினும் இப்பாடல் நெடுஞ்செழியனைப் பற்றியதென்று நச்சினாக்கின்ரியர் கூறியுள்ளார். அவர் கூற்றைத் தழுவியே இப்பாடல் நெடுஞ்செழியனைப் பற்றியது என்று இங்குக் கூறப்பட்டுள்ள்து.