பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

தமிழ் மொழி - இலக்கிய வரலாறு


நெடுநல்வாடை என்பது 'நெடிதாகிய நல்ல வாடை' என விரியும். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஒரு நாள் ஓரூழிபோல நெடிதாகிய வாடையாய், அரசன், மனைவியோடு உறைவதில் மனமற்றுப் பகைவர் நாட்டில் பாசறை அமைத்துத் தங்கியிருப்பதால் அவனுக்கு நல்லதாகிய வாடையாயினமையின், 'நெடுநல்வாடை' எனப் பட்டது.

இப்பாடலில்-குளிர்காலத்தில் மக்களும் விலங்குகள் பறவைகள் முதலியனவும் குளிரால் வருந்தியிருக்கும் நிலை, அரசமாதேவி வாழும் அரண்மனை அமைப்பு, அவள் உறங்கும் கட்டிலின் சிறப்பு, அவள் மன்னனின் பிரிவால் வருந்தும்நிலை, அவளது வருத்தம் தீரச் செவிலியரும் பணிப் பெண்களும் ஆற்றும் செயல். பாசறையில் அரசன் நடந்து சென்று, புண்பட்ட வீரர்களைக் கண்டு முக மலர்ச்சியோடு ஆறுதல் கூறுதல் என்பன அழகுறக் கூறப்பட்டுள்ளன. மேலும் இப்பாடலில் இடையிடையே பூவின் மலர்ச்சிகொண்டு பொழுதை அறியும் வழக்கம், மகளிர் மாலைக் காலத்தைக் கொண்டாடுதல், அரண்மனை வகுக்கும் முறை முதலியவை. கூறப்பட்டுள்ளன.

8. குறிஞ்சிப்பாட்டு : 261 அடிகளைக் கொண்ட இப்பாடல் குறிஞ்சி ஒழுக்கத்தைப் பற்றியது. இதனைப் பாடியவர் கபிலர் என்பவர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச் சுவையை ஊட்டக் கபிலர் இப்பாடலைப் பாடினார். களவு வாழ்க்கையில் தலைவிக்குக் காவல் இருந்தது. அவள் தலைவன் வரும் வழியிலுள்ள கேடுகளை எண்ணி அஞ்சினாள். அதனால் அவள் பாங்கிக்கு அறத்தொடு நின்றாள். அப்பாங்கி அதனைச் செவிலிக்கு நயம்பட உரைக்கும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுள் தலைவி தலைவனைச் சந்தித்தல், அவருள் அன்பு உண்டாதல், குறிஞ்சி நிலச் சிறப்பு, குறிஞ்சி நிலத்து மலர்கள் 99இன் பெயர்கள் முதலியவையும் கூறப்பட்டுள்ளன, குறிஞ்சித்