பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

தமிழ்மொழி - இலக்கிய வரலாறு


இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் என்பவர். இரணிய முட்டம் என்பது மதுரையை அடுத்த ஆனைமலைப் பகுதி-அழகர் மலைப்பகுதி-இவ்விரண்டையும் சூழஉள்ள பகுதி ஆகிய சிறிய நிலப்பகுதியின் பெயராகும். இந்நிலப்பகுதியில் சிறு குன்றுகளும் பெருங்குன்றுகளும் மலைகளும் மிக்குள்ளன.

மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் 'கடாம்' எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டு "மலைபடுகடாம்' எனப் பெயர் பெற்றது. இது கூத்தர் ஆற்றுப்படை எனவும் வழங்கும்.

வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள சவ்வாது மலைத் தொடரும் அதனைச் சூழ உள்ள நிலப்பகுதியும் நன்னனது நாடாகும். அடிவாரத்திலிருந்து மலைமீது ஏறிச்சென்று, மலையில் பாய்ந்தோடும் சேயாற்றைத் தாண்டி அதன் கரை வழியே நடந்து தரையில் அமர்ந்திருந்த செங்கண்மா என்னும் நன்னனது நகரத்தை அடையும்வரையில் மலையடிவார ஊர்கள், மலைமேலிருந்த ஊர்கள், காடுகள், ஊர் மக்கள் இயல்புகள், அவர்கள் விருந்தினரை உபசரிக்கும் முறை, ஆங்காங்குக் கிடைத்த உணவு வகை, மலைமீது காரியுண்டிக் கடவுள் பற்றிய விவரம், நன்னனது கொடைத்திறன் இன்ன பிறவும் இந்நெடிய பாட்டில் அழகுறக் கூறப் பட்டுள்ளன.

சிறப்புச் செய்திகள்

உயிர்க் காட்சிச்சாலை : பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் அவனது தலைநகரான மதுரை மாநகரத்தில் கரடி, புலி முதலிய கொடிய விலங்குகள் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன என்று மதுரைக் காஞ்சி (வரி 677) கூறுகின்றது. இக்காலத்துச் சென்னை போன்ற மாநிலத் தலைநகரங்களில் வைக்கப்பட்டுள்ள உயிர்க் காட்சிச்சாலை இத்தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே இருந்தது என்பது இதனால் தெரிகிறதன்றோ?