பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


சாங்கப்பணியில் ஈடுபட்டிருந்தனர். சட்டையிட்ட வெளி நாட்டு ஊமையர் அரசன் பாதுகாவலராய் இருந்தனர். அவர்கள் ‘மிலேச்சர்’ எனப்பட்டனர்.[1]

அந்தணர் செல்வாக்கு : தொல்காப்பியருக்கு முன்னரே வடமொழியாளர் தமிழகத்தில் தங்கித் தங்கள் மொழியையும் வேத நெறியையும் இந்நாட்டில் பரப்பலாயினர் என்பது தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை நூல்களைக் கொண்டு முன்பே உணர்த்தப்பட்டது. காலம் செல்லச் செல்ல வேதநெறி தமிழகத்தில் வேரூன்றிப் பரவலாயிற்று என்பதும் முன்னரே விளக்கப்பட்டது. கீழ்வரும் பத்துப் பாட்டுச் செய்திகள் இவ்வுண்மையை நன்கு உணர்த்துகின்றன.

பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை சங்ககாலத்தது அன்று என்பது முன்பே கூறப்பட்டுள்ளதன்றோ? அஃதொழிந்த ஒன்பது பாடல்களுள் நான்கு பாடல்களைப் பாடியவர் அந்தணராவர். இளந்திரையன்மீது பெரும் பாணாற்றுப்படையும் கரிகாலன் மீது பட்டினப்பாலையும் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், குறிஞ்சிப் பாட்டைப் பாடிய கபிலர், நன்னன்மீது கூத்தராற்றுப் படையைப் பாடிய இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார் ஆகிய மூவரும் அந்தணப் புலவாாவர்.[2] இவருள் உருத்திரங்கண்ணனார் கரிகாலனால் நூறாயிரம் பொன் பரிசளிக்கப் பெற்றவர் என்று கலிங்கத்துப் பரணி (இராச பாரம்பரியம், 21) கூறுகிறது. கரிகாலன் அப் புலவர்க்குப் பரிசிலாக வழங்கியிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்று உறையூரில் இருந்தது. முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி. பி. 1219இல் உறையூரைத் தரைமட்ட


  1. முல்லைப்பாட்டு, வரி 59-56.
  2. தொல்காப்பியம், மரபியல், நூற்பா 74, பேராசிரியர் உரை.