பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

காப்பாளர் உறைபதி' என்று அவன் கூறியிருப்பதை நோக்க, அவ்வூரும் பிரமதேயச் சிற்றூர் என்று கருதுதல் தகும். அங்கு இருந்த அந்தணர் வீடுகளில் கோழியும் நாயும் புகவில்லை. வீட்டை அடுத்துப் பந்தல் இருந்தது . அப்பந்தலின் ஒரு காலில் பசுக்கன்று கட்டப்பட்டிருந்தது. இல்லம் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது. அங்கு வளர்ந்த கிளிக்கு வேத ஓசை கற்பிக்கப்பட்டது. அவ்வில்லத்து அரசியாகிய பார்ப்பணி ஆவுதிக்கு உரிய நெற் சோற்றைப் பதமறிந்து சமைத்தாள். கொம்மட்டி மாதுளங் காய் மிளகுப்பொடி கலக்கப்பட்டுக் கறிவேப்பிலை அளாவப் பட்டு வெண்ணெயில் வேகவைக்கப்பட்டது. மாவடு ஊறுகாயும் உணவுப் பொருளாகப் பயன்பட்டது (பெ.ஆ. படை,

297-310).

அந்தணர்கள் தாம் தங்கியிருந்த இடங்களில் யாக சாலைகளை அமைத்திருந்தனர். ஒவ்வொரு யாகசாலையிலும் வேள்வித்தூண் (யூபம்) நடப்பட்டு இருந்தது என்று பெரும்பாணாற்றுப்படை (வரி 315-316) பேசுகின்றது. பூந்தாதினை உண்ணும் வண்டு ஒலி செய்வது போல வேதத்தை முழுதுணர்ந்த அந்தணர் துதிப்பாடல்களைப் பாடினர் என்று மதுரைக் காஞ்சி (வரி 655-656) கூறியுள்ளது. மதுரையில் பெளத்தர் பள்ளி, சமணர் பள்ளி இருந்தாற்போல அந்தணர் பள்ளியும் அமைந்திருந்தது. அப்பள்ளி மலையை உள்வெளியாக வாங்கி இருப்பிடம் ஆக்கினாற் போன்ற அமைப்பைப் பெற்றிருந்தது (ம.கா. வரி 474) .

யாகங்களைப் பண்ணிப் பெரிய சுவர்க்கத்து ஏறப் போகும் அந்தணர்கள் அரசனை அடக்குமாறு போல அமைச்சர்கள் அரசனிடத்திருந்த நன்மையும் தீமையும் நெஞ்சத்தாலே கண்டு அத்தீங்குகளை ஆராய்ந்து அவற் றிலே ஒழுகாமல் அடக்கினர் (ம. கா. வரி. 494-496) . இந்த உவமையிலிருந்து, வேதியராகிய அந்தணப் பெரியோர்கள் அரசனுக்கு அறிவுரை கூறும் (ஆசான் என்ற) உயர் நிலையில் இருந்தனர் என்பது தெளிவாகிறதன்றோ?