பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு



'சங்க காலம்' என்னும் பகுதியில் முன்பே கூறப்பட்ட தன்றோ? எனவே, சிலப்பதிகார வரலாற்றுத்தொடக்கத்தில் கரிகாலன் வாழ்ந்திருந்தான் என்று கொள்வது பொருத்தமாகும்.

இலங்கைக் கயவாகு சேரன் செங்குட்டுவன் பத்தினிக்குக் கோவில் கட்டிவழிபட்டபோது வந்திருந்த அரசருள். கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்' ஒருவன் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது (காதை 30,வரி 160). இவன் முதலாம் கஜபாகு என்று இலங்கை வரலாறு கூறும். இவன் ஆட்சிக்காலம் கி. பி. 114-186. இக்கயவாகு இலங்கையில் பத்தினி வணக்கத்தை ஏற்படுத்தினான் என்று இலங்கைக் கதைகளும் நாட்டுப் பாடல்களும் நவில்கின்றன. இன்றும் பத்தினி வணக்கம் இலங்கை மக்கள் சமயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது.[1]

'கயவாகு வேந்தன் சோழநாட்டின்மீது படையெடுத்துச் சென்றபோது யாழ்ப்பாண வழியே சென்றனன்; போரின்பின் திரும்பும்போது போர் வீரரைச் சிறைப்பிடித்து வந்தான். அவர்களுடன் பத்தினிக் கடவுளின் காற்சிலம்பும் வேறு சில அணிகளும் கொண்டுவந்தான் என்று இராசவழி’ என்னும் இலங்கை வரலாற்றுநூல் கூறுகிறது. கயவாகு வேந்தனே இலங்கையில் பத்தினி வணக்கத்தைத் தோற்றுவித்தவன் என்று கூறும் சிலப்பதிகாரச் செய்தி இதனால் உறுதி பெறல் காணத்தகும். இலங்கையில் உள்ள கண்ணகி

-


  1. 2. History of Ceylon, Vol. I, Part I, pp. 183—185; சிலப்பதிகார நிகழ்ச்சிகள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டி னது ஆகலாம்; ஆயின் அந் நூல் கி.பி. ஐந்தாம் நூற்றாண் டுக்கு முன்பு செய்யப்பட்டதென்று கூற இயலாது என்று வர லாற்றாசிரியர் திரு. K. A. நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள் ளார்; ஆயின் அதற்குரிய காரணங்களைக் காட்டவில்லை. —A History of S. India, p. 112.