பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

 செழியன் காலத்தவர். இந் நெடுஞ்செழியன்மீது ஒரு சங்கப்புலவரும் பாடவில்லை. எனவே, இந்நெடுஞ்செழியனை உண்மை அரசன் என்று கொள்வதற்கில்லை.

5. பத்தினி வணக்கம் சிலப்பதிகாரத்தில் கூறப்புட் டுள்ளதே தவிரப் பிற தொகை நூல்களில் கூறப்படவில்லை.

6. கண்ணகியால் குறிக்கப்பட்ட கற்புடை மகளிருள் ஒருத்தி கரிகாலன் மகள் ஆதிமந்தி என்பதற்குச் சான்றில்லை. ஏனைய பத்தினிப் பெண்களும் பிற தொகை நூல்களில் குறிக்கப்படவில்லை.

7. சிலப்பதிகாரத்தில் வேங்கடமலையில் திருமால் நின்ற கோலத்தில் இருப்பதாகச் சிலப்பதிகாரம் செப்புகிறது. ஆயின் தொகை நூல்களில் வேங்கடமலை சமயத் துறையில் சிறந்ததாகக் கூறப்படவில்லை. சிலப்பதிகாரத்திலும் மணி மேகலையிலும் கூறப்பட்டுள்ள சமய வளர்ச்சியைத் தொகை நூல்களில் காணுமாறு இல்லை. ஐந்தெழுத்தும் எட்டெழுத்தும் தொகை நூல்களில் கூறப்படவில்லை.

8. காவிரி என்னும் பெயரே காவேரி என்று சிலப்பதிகாரத்தில் மாறி வழங்கப்பட்டமையே சிலப்பதிகாரம் பிற்பட்டது என்பதை உணர்த்துகிறது. காவிரி பற்றிய புராணகதையும் மணிமேகலையில் காணப்படுகிறது.

9. அகநானூற்றில் காணப்படும் திருமண முறைக்கும் கோவலன் கண்ணகி திருமண முறைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

10. தொகை நூல்களில் கூத்தர், விறலியர் நடனங்களே கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வந்துள்ள மாதவியின் நடன அரங்கேற்றம் பரத நாட்டியத்தைப் பின் பற்றியது.

11. வரிப்பாட்டு முதலிய பாடல்கள், சிலப்பதிகாரம் தொகை நூல்களுக்குப் பிற்பட்ட வளர்ச்சியை உணர்த்து வனவாகும்.